பாளை. மத்திய சிறையில் கூடுதலாக தொழில் பயிற்சி: சிறைத் துறை ஏடிஜிபி தகவல்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு கூடுதலாக தொழில் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) சைலேந்திரபாபு .

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு கூடுதலாக தொழில் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சிறைத் துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) சைலேந்திரபாபு .
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சைலேந்திரபாபு கூறியது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு விவசாயம், நெசவு, ஆடை வடிவமைப்பு, பைண்டிங், ஹாலோ பிளாக் தயாரிப்பு, பலகாரங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சென்னையில் சிறைக் கைதிகளுக்கான பேக்கரி அண்மையில் தொடங்கப்பட்டது. அங்கு தயாரிக்கப்படும் ரொட்டிகள், அரசு மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏற்கெனவே சில தொழில் பயிற்சிகள் அளிக்கப்படடாலும், கூடுதலாக பேக்கரி அமைக்கவும், காலணிகள் தயாரிப்பு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழக சிறைகளில் போதைப்பொருள் மற்றும் செல்லிடப்பேசிகள் புழக்கம் உள்ளதாக அடிக்கடி வரும் புகார்களைத் தொடர்ந்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதையும் மீறி கண்டுபிடிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாளையங்கோட்டை சிறைக் கைதிகளில் 40 பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுவதோடு, சிறைச்சாலையில் உள்ள கட்டமைப்புகள், தேவைப்படும் கருத்துருக்கள் குறித்து அறிய உள்ளேன் என்றார் அவர்.
பேட்டியின்போது சிறைத் துறை தென்மண்டல காவல் துணைத் தலைவர் கனகராஜ், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com