கலைஞர்களுக்கு விருதுகளை விட படைப்புகள்தான் மகிழ்ச்சி தரும்: எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு படைப்பாளிக்கு அல்லது கலைஞனுக்கு விருதுகளை விட அவனது படைப்புகளே அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்றார் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன்

ஒரு படைப்பாளிக்கு அல்லது கலைஞனுக்கு விருதுகளை விட அவனது படைப்புகளே அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கும் என்றார் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வண்ணதாசன் பேசியதாவது: 1962 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடித்த நேரத்தில் நான் எழுதிய எனது முதல் கதை புதுமை இதழில் வெளியானது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
இசைக் கலைஞர்கள், போராளிகள், கலைஞர்கள் சாவதில்லை. அவர்கள் மறுபிம்பம் போல வேறொருவரின் முகம் வழியாக வெளிப்படுவார்கள். ஒரு படைப்பாளியை மற்றொரு படைப்பாளிதான் உயிரோடு வைத்திருக்க முடியும். ஊக்கத்தோடு பணிகளைத் தொடரச் செய்ய முடியும். அதுபோன்ற பல அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படைப்பாளி அல்லது கலைஞனுக்கு விருதுகளைக் காட்டிலும் படைப்புகள்தான் அதிக மகிழ்ச்சியைத் தரும். அதுபோல சாகித்ய அகாதெமி விருது என்பதை நான் அடைந்ததாக நினைக்கவில்லை. ஏனெனில் அதனை அடைய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
அதேநேரத்தில் வாழ்விலும், எழுத்திலும் நான் முதிர்ந்த நிலையை அடைந்தபோது கிடைத்த தேசிய அங்கீகாரத்தால் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி தருகிறது.
கலைஞர்கள் மனிதர்களின் உள்உணர்வுகளை தூண்டுபவர்களாக இருக்க வேண்டும். தொன்மங்களைப் புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும். நான் வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவனாக இருந்தாலும் கலைஞனாக ஓய்வுபெறவில்லை. ஏனெனில் கலைஞர்களுக்கு ஓய்வே கிடையாது.
மொழிகளையெல்லாம் விஞ்சியது மழலைமொழி. அதைத்தாண்டிய அற்புதம் உலகில் இல்லையெனலாம். அவர்களின் வழியே கற்கும் விஷயங்கள் ஏராளம். கலைஞர்களுக்கு பாராட்டுச் சால்வைகள் ஊக்கம் தருவதைக் காட்டிலும், அதனை போர்த்தும் கரங்களின் அன்பும், அதில் வெளிப்படும் வெப்பமும் அதிக ஊக்கத்தைத் தரும். அத்தகைய ஊக்கத்தோடு இன்று இரவிலிருந்தே எனது அடுத்த சிறுகதையை எழுதத் தொடங்க வேண்டுமென்ற உத்வேகம் ஏற்படுகிறது என்றார் அவர்.
விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் இரா.நாறும்பூநாதன் வரவேற்றார். மாநில துணைச் செயலர் அ.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில பொதுச்செயலரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான சு.வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் மா.முருகன், பேராசிரியர்கள் மேலும் சிவசு, ச.மகாதேவன், கவிஞர் கிருஷி, எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடல்கள் பாடினார். மாநிலக் குழு உறுப்பினர் க.வடிவேலு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com