அம்பை பகுதியில் சூறைக் காற்று:ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

அம்பை பகுதியில் சூறைக் காற்று:ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட  இடங்களில் திங்கள்கிழமை இரவில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்கம்பங்கள் சாய்ந்தும், பெரிய மரங்கள் முறிந்தும் மின்சாரம் தடைபட்டது.

சாட்டுப்பத்து, ஊர்க்காடு, கோடாரங்குளம், ஏர்மாள்புரம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்தன.

ஊர்க்காடு பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் சுமார் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 15 ஆயிரத்திற்கும் மேலான வாழைகள் காற்றில் சாய்ந்தன.

இதுகுறித்து ஊர்க்காடு விவசாயி சரவணகிளி கூறியதாவது: சுமார் 2 ஏக்கரில் பயிரிட்டிருந் வாழைப்பயிர், பருவமழை பொய்த்துப் போன நிலையில் கருகத் தொடங்கியது. எனவே, மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சினோம்.

தற்போது வாழைகள் குலைதள்ளி, 20 நாள்களில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை அடித்த சூறைக் காற்றில் 2,500 வாழை மரங்கள் முறிந்து அனைத்தும் நாசமாகிவிட்டன. ஒரு வாழைக்கு சுமார் 150 ரூபாய் செலவு ஆகியுள்ளது. இதனால் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.

சங்கரன்கோவிலில் மின் விநியோகம் பாதிப்பு
சங்கரன்கோவிலில் சூறைக்காற்றில் மின்கம்பங்கள் மீது மரம் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்று வீசியது. இதனால் வீடுகளில் போடப்பட்டிருந்த கூரைகள் காற்றில் பறந்தன. திருவேங்கடம் சாலையில் 2 மரங்கள் சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்கம்பங்கள் முறிந்து வளைந்தன. சுமார் 10 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் வளைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விரைவில் மின் விநியோகம் தரும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்தார்.

அப்பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒர்க்ஷாப் முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. இதேபோல் புதுமனை 3ஆம் தெருவில் மரம் சாய்ந்து மாரியப்பன் என்பவரது வீட்டின் மீது விழுந்தது.

செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை அவர்கள் வீட்டைவிட்டு வெளியே  வரமுடியாத நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com