"நீர் சேமிப்புக்கான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்'

தண்ணீர் மாடுபடுதலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போல நீர் சேமிப்புக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறியும் புதிய ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார் பேராசிரியர் எஸ்.தினகரன்.

தண்ணீர் மாடுபடுதலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போல நீர் சேமிப்புக்கான புதிய வழிமுறைகளைக் கண்டறியும் புதிய ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார் பேராசிரியர் எஸ்.தினகரன்.
 உலக தண்ணீர் தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் எஸ்.தினகரன் பேசியது: உலக தண்ணீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 22 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நிகழாண்டுக்கான கருப்பொருளாக வீணான நீரைச் சுத்திகரித்து பயன்படுத்துவோம் என்பது வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அனைத்து நாடுகளிலும் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது.
 ஒரு மனிதன் சராசரியாக நாள்ஒன்றுக்கு 130 லிட்டர் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் நாளொன்றுக்கு சுமார் 60 லிட்டரும், நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள் நாளொன்றுக்கு சுமார் 230 லிட்டரும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள் (ஒரு லிட்டர் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீருக்கு 15 லிட்டர் சாதரண நீர் தேவைப்படுகிறது). மாடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 20 லிட்டர் தண்ணீரும், ஆடுகளுக்கு 5 லிட்டர் தண்ணீரும் கண்டிப்பான தேவையாக உள்ளது.
 நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் சர்வதேச அளவில் வடக்குஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. கடலோர பகுதிகளில் 150 அடிக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டதால் கடல்நீர் உள்ளே புகுந்து உவர்ப்பு நீரின் பரப்பு அதிகரித்து வருகிறது. பருநிலை மாற்றத்தால் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ மழைப்பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. இந்தநேரத்தில் தண்ணீர் சிக்கனத்தை மத்திய-மாநில அரசுகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
 குளிக்கவும், பாத்திரம் கழுவவும் வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிப்புத் தொட்டியில் சேகரிக்கலாம். அங்கு மணல், கூலாங்கற்கள், கரிகள் போன்றவற்றை இட்டு சுத்திகரித்த நீராக மாற்றி பயன்படுத்தலாம். மழைநீர் சேகரிப்புத் திட்டம் போன்றவற்றின் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம். தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.
 தண்ணீரில் கலக்கும் மாசுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதேபோல நீர்சேமிப்புக்கான புதிய வழிமுறைகள் குறித்த புதிய ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார் அவர். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளர்கள் பி.மாரிலெனின், என்.பொன்னரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com