நெல்லை அருகே 2 டன் காலாவதி சாக்லேட்டுகளை எரிக்கும் முயற்சி முறியடிப்பு: உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

திருநெல்வேலி அருகே காலாவதியான 2 டன் சாக்லேட்டுகளை எரித்து அழிக்க முயன்ற நடவடிக்கையை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

திருநெல்வேலி அருகே காலாவதியான 2 டன் சாக்லேட்டுகளை எரித்து அழிக்க முயன்ற நடவடிக்கையை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
திருநெல்வேலியை அடுத்த நடுவக்குறிச்சியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், காலாவதியான சாக்லேட்டுகளை சிலர் அவ்வப்போது கொட்டி எரித்து வந்துள்ளனர். இதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 4 வாகனங்களில் 2 டன் சாக்லேட் மூட்டைகளை சிலர் கொண்டுவந்து கொட்டி, எரிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் சென்று சாக்லேட்டுகளை எரிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். அவற்றை கிடங்குகளுக்கு திருப்பியெடுத்துச் செல்லவும் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் செந்தில்குமார் கூறியது: திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் சாக்லேட் மிட்டாய்களின் பிரதான முகவருக்குச் சொந்தமான நிலம் நடுவக்குறிச்சியில் உள்ளது. அங்கு சில நாள்களாக காலாவதி பொருள்களை கொட்டி எரித்து வந்துள்ளனர். வியாழக்கிழமையும் 2 டன் காலாவதி சாக்லேட்டுகளை எரிக்க முயன்றனர். சாக்லேட்டுகளின் மீதுள்ள பிளாஸ்டிக் கவர்கள் மக்கும் தன்மையற்றவை. மண்ணில் புதைத்தாலும் அவை ஆண்டுக்கணக்கில் அப்படியே இருக்கும். மேலும், இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அறிவியல்பூர்வமாக அழிக்க மாவட்டந்தோறும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன.
அவர்களிடம்தான் காலாவதி பொருள்களை ஒப்படைத்து பாதுகாப்பாக அழிக்க வேண்டும். இல்லையெனில், பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதலுடன் உரிய புகைப்போக்கிக் கூண்டு, தகுந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு எரித்து அழிக்க வேண்டும்.
ஆனால், நடுவக்குறிச்சியில் சாக்லேட்டுகளை கொண்டுவந்தோர் இத்தகைய நடவடிக்கையைப் பின்பற்றவில்லை. கழிவுகளை எரிக்கும் முன்பாகவே தடுத்துவிட்டோம். மேலும், அங்கு கொட்டிவைத்திருந்த காலாவதி சாக்லேட்டுகளையும் திருப்பியெடுத்துச் சென்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக, உள்ளாட்சியின் பொது சுகாதார நிர்வாகம், காவல் துறையிடம் உணவுப்
பாதுகாப்புத் துறை மூலம் புகார் அளிக்கப்படும். அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பேட்டையில் ஜெல்லி மிட்டாய்கள்!
திருநெல்வேலி நகரம், பேட்டையிலிருந்து பழையபேட்டைக்கு செல்லும் இணைப்புச் சாலையோரம் இதேபோல, காலாவதி ஜெல்லி மிட்டாய்களை சிலர் வீசி வருகின்றனர். புதன்கிழமை கொட்டப்பட்ட ஜெல்லி மிட்டாய்களை அப்பகுதி குழந்தைகள் எடுத்து சாப்பிட்டதால் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாகவும், உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த மிட்டாய்களை விற்கும் முகவர், வியாபாரிகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com