மரபுசாரா எரிபொருள் மின்கல ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்: நெல்லை பல்கலை. துணைவேந்தர் கி.பாஸ்கர்

மத்திய அரசின் நிதியுதவியோடு ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு மரபுசாரா எரிபொருள் மின்கல ஆய்வுகளுக்கு முக்கியத்துவம்

மத்திய அரசின் நிதியுதவியோடு ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு மரபுசாரா எரிபொருள் மின்கல ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கி.பாஸ்கர்.
திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
இப் பல்கலைக்கழகத்தில் 1.2 மெகாவாட் சூரிய ஒளிவட்டக் கருவிகளை வாங்கவும், அதனை இந்த வளாகத்தில் நிறுவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், அதில் ஒரு லட்சம் யூனிட் பல்கலைக்கழகப் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ளவற்றை மத்திய மின்தொகுப்பில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சூரியஒளி மின்உற்பத்திக்கான பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உயர்கல்வித் துறையின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் இப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.1.5 கோடி நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதைக் கொண்டு திட உயிரகவினம் எரிபொருள் மின்கலம் (ள்ர்ப்ண்க் ர்ஷ்ண்க்ங் ச்ன்ங்ப் ஸ்ரீங்ப்ப்) மற்றும் லித்தியம் அயன் மின்கலன்களை அபிவிருத்தி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார்ந்த எரிபொருள்களுக்குப் பதிலாக மரபுசாரா எரிபொருள் மின்கல ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இத் திட்டத்தால் கிடைக்கும் மின்கலத்தை நிலையான மின்உற்பத்தி சாதனமாகப் பயன்படுத்த முடியும். இந்த ஆராய்ச்சியைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் அறிவியல் துறையின் பேராசிரியர்கள் டி.ஆர்.ராஜசேகரன், வி.சபரிநாதன், என்.நாகராஜன் ஆகியோர் புதிதாக 4 ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இப் பல்கலைக்கழகத்தின் கீழ் முதுநிலையில் சைபர் செக்யூரிட்டி,டேட்டா அனலைசஸ் ஆகிய இரு படிப்புகள் இக் கல்வியாண்டு முதல் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் தொலைத் தொடர்புத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். இது தவிர மரைன் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன.
கன்னியாகுமரி,கடையநல்லூர், நாகலாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இளநிலை வேதியியல், இயற்பியல் படிப்புகளுக்கு நிகழாண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் அறிவியல் பட்டதாரிகளாக மாற வாய்ப்புகள் கிடைக்கும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக புகார்கள் வந்தன. ஆகவே, அடுத்த பருவத் தேர்வுகளின்போது கல்லூரி அடையாள அட்டைகளைக் கொண்டே தேர்வுக்கு அனுமதிக்கும் வகையில் புதிய நடைமுறைகள் குறித்து பரிசீலித்து அறிவிக்கப்படும்.
இப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில்  ஆசிரியர்-மாணவர் விகிதம், அடிப்படை வசதிகள், ஆய்வுக் கூடங்கள், மைதானங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விதிமுறைகள் பின்பற்றப்படாத சங்கரன்கோவில் பொய்கைமேடு மற்றும் நான்குனேரியில் உள்ள தனியார் கலைஅறிவியல் கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார் அவர்.
பேட்டியின்போது பல்கலைக்கழகப் பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com