கழிவு நீரோடையாக மாறிய நான்குனேரியன் கால்வாய்: சுகாதாரச் சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம்

களக்காடு நான்குனேரியன் கால்வாயில் கலக்கும் சாக்கடைக் கழிவுகளாலும்,   கொட்டப்பட்டு வரும் குப்பைகளாலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு,  அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

களக்காடு நான்குனேரியன் கால்வாயில் கலக்கும் சாக்கடைக் கழிவுகளாலும்,   கொட்டப்பட்டு வரும் குப்பைகளாலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு,  அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களக்காடு மலையடிவாரத்தில் இருந்து வரும் தண்ணீர் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய்,  உப்பாறு மூலமாக பாசனக் குளங்களைச் சென்றடைகிறது.  நான்குனேரியன் கால்வாயில் பருவமழைக் காலங்களில் நீர்வரத்து இருக்கும்.  கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் கால்வாய் வறண்டு காணப்படுகிறது.
இக் கால்வாயில்,  மூணாறு பிரிவு முதல் பழைய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள பாட்டப்பிள்ளை மதகு வரையிலும் உள்ள சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியை களக்காடு நகர மக்கள் குளிப்பதற்கும்,  துணி துவைப்பது உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இக் கால்வாயில் ஆற்றங்கரைத்தெரு, கோயில்பத்து,  வியாசராஜபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் கழிவுகளும் கொட்டப்படுகின்றன.  குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் ஆற்றில் கலக்கும்  வகையிலேயே பேரூராட்சி சார்பில் வாருகால்கள் கட்டப்பட்டுள்ளன.  நாளுக்கு  நாள் குடியிருப்புகள் பெருகி வரும் நிலையில் இக்கால்வாயில் தற்போது கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன் மூலம் கொசுக்கள் பெருகி நோய் பரவும் நிலையும் உள்ளது.
பருவமழைக் காலங்களிலும்,  வடக்குப் பச்சையாறு அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது தான் இக்கால்வாயில் நீர் வரத்து இருக்கும்.  கடந்த இரு ஆண்டுகளாக நிலவும் தொடர் வறட்சியால் கால்வாய் வறண்டே காணப்படுகிறது.  இதனால் குப்பைகள்,  கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியை அதிகரித்து, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் கேந்திரமாக மாறிவிட்டது.
கழிவுகள் கால்வாயில் கலப்பதைத் தடுக்கவும்,  குப்பைகளைக் கொட்டாமல் இருக்க போதிய குப்பைத் தொட்டிகளை கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் அமைக்கவும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com