வரி விதிப்புக்கு எதிர்ப்பு: பாளை. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட வந்த 42 பேர் கைது

புதிய வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட வந்த 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதிய வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட வந்த 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டு குடியிருப்பு வீடுகளை அளவிட்டு கூடுதல் வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் வீடுகளை அளவிடும் பணி தொடங்கியது. மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அளவிடும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர வார்டுகளில் வீடுகளை அளவிடும் பணி தொடங்கி கூடுதல் வரி கட்டக் கூறி நோட்டீஸ் விநியோகமும் நடைபெற்று வருகிறது.
பழைய வீடுகளுக்கு சதவீத அடிப்படையில் மட்டுமே வரி வசூலிக்க வேண்டும். புதிய வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் கட்டியுள்ள கட்டடத்தை அளவீடு செய்து அதற்கேற்ப வரி விதிக்க வேண்டும். இல்லையெனில் ரூ.100 வரி செலுத்திய குடிசை வீடுகளுக்கு ரூ.3 ஆயிரம் வரை வரி செலுத்த நேரிடும். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாடகைத் தொகையைவிட அதிகமாக தங்களது சொந்த வீட்டுக்கு மாநகராட்சிக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, மாநகாரட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகளை அளவீடு செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும்; வாய்மொழியாக கூடுதல் வரி வசூலிக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்; 2011ஆம் ஆண்டு முதல் வரி விதிக்கக் கூடாது; 1.4.2018இல் ரிவிஷன்படி வரி விதிக்க வேண்டும்; மாநகராட்சி சர்வே வரைபடம், பட்டா நகல் பெற ரூ.50 ஆக இருந்த கட்டணத்தை ரூ. 500 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். வணிக வளாகங்களையும் அளவீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சியின் 23ஆவது வார்டு பொதுமக்கள், மாமன்ற முன்னாள் உறுப்பினர் உமாபதி சிவன் தலைமையில், தன்எழுச்சி போராட்டமாக ராஜகோபாலசுவாமி கோயிலில் இருந்து பேரணியாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தனர். தகவலறிந்து ராஜகோபால சுவாமி கோயில் அருகே வியாழக்கிழமை அதிகாலை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்துக்கு வந்த பொதுமக்களை கோயில் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 18 பெண்கள் உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com