சர்வதேச இளைஞர் தினம் நெல்லையில் மினி மாரத்தான்: 1000 மாணவர்கள் பங்கேற்பு

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில், சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர், மாணவிகளிடையே எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரத்த தானம் வழங்குவதை ஊக்குவிக்கவும், சமூகத்தை பயன்தரும் வகையில் இளைஞர்களை வழிநடத்தவும் இந்தப் போட்டிக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர், மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை காலை போட்டி தொடங்கியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய ஓட்டமானது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், திருநெல்வேலி சரக டிஐஜி இல்லம், திருச்செந்தூர் சாலை வரை சென்று மீண்டும் அதே பாதையில் திரும்பி அண்ணா விளையாட்டு மைதானம் வரையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.
இதில், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ரேவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அமலவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com