அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும்: துணைவேந்தர் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டுமெனில் ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டுமெனில் ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ். தங்கசாமி வலியுறுத்தினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகமும், தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியும் இணைந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கான சிறப்பு பயிலரங்கத்தை சனிக்கிழமை நடத்தின. ஆங்கில மொழிப் பாடத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் நிலைகளில் சரியான உச்சரிப்புத் திறன் வளர்த்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் 3 மாவட்டங்களில் இருந்து 71 கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிலரங்குக்கு தலைமை வகித்து பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ். தங்கசாமி பேசியது:
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகின்றனர். இந்த மோகத்தால் மெட்ரிக் பள்ளிகள் மீது பெற்றோர்களின் கவனம் அதிகரித்தது. இப்போது சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா என அடுத்தக்கட்ட நிலைக்கு முன்னேறியுள்ளது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் மிகக் குறைவு. ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களும் வகுப்புகளில் ஆங்கிலத்தை பின்பற்றுவதில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். கற்பித்தல், கற்றுக் கொடுத்தல் என்பது இரு நிலைகளில் தொடர வேண்டும். கற்றுத்தரும் ஆசிரியர்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். கற்பித்தல் முறையிலும் மாற்றத்தை உள்புகுத்த வேண்டும். மாணவர்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கும் ஆசிரியராக இருத்தல் வேண்டும்.
இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பாடத்தில் எழுதுதல், வாசித்தல் ஆகியவற்றில் புலமை உள்ளது. ஆனால், உச்சரிப்புத் திறன், வாய்மொழி சார் கற்றுத் தருதல் என்பது குறைவாக உள்ளது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரிடம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டுமெனில் ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும். இன்றைய கல்வியியல் கல்வி பயிலும் மாணவர்களும் அதற்கேற்ப தயாராக வேண்டும்.
100 நாள், 200 நாளில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம், பேசலாம், எழுதலாம் என இருந்துவிடக் கூடாது. கற்றல், எழுதுதல், உச்சரித்தல், வாய்மொழியாக பேசுதல் என தொடர்ச்சியாக பயிற்சி அவசியம்.
எனவேதான், ஆங்கிலம் கற்பித்தலில் தனிநபர், இணை, சிறு குழுக்கள் மூலம் உச்சரிப்புத் திறன் வளர்ப்புப் பயிற்சியை அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
இந்த பயிற்சியில், பல்கலைக் கழக துணைப் பதிவாளர் மோகன், இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் நிர்மலா தேவி, டீன் புனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com