இதய நோய் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்'

இதய நோய் பாதிப்புகள் குறித்து கர்ப்பிணிகளிடையே விழிப்புணர்வு அவசியம் என சென்னை மருத்துவக் கல்லூரி இதயவியல் பேராசிரியர் ஜெஸ்டின் பால் குறிப்பிட்டார்.

இதய நோய் பாதிப்புகள் குறித்து கர்ப்பிணிகளிடையே விழிப்புணர்வு அவசியம் என சென்னை மருத்துவக் கல்லூரி இதயவியல் பேராசிரியர் ஜெஸ்டின் பால் குறிப்பிட்டார்.
அகில இந்திய மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பின் திருநெல்வேலி கிளை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறையில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றங்கள், புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் க. சித்தி அத்திய முனவரா குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரி இதயவியல் பேராசிரியர் ஜெஸ்டின் பால் பேசியதாவது:
கர்ப்பிணிகளுக்கு இதய நோய் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லை. 55 சதவீதம் பேர், இதய நோய் பாதிப்பு இருப்பதாக அறிந்திருப்பதில்லை. பிரசவத்தின்போது அவர்கள் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இதனால், பிரசவம் பார்க்கும் மருத்துவர்களும் சவால்களை சந்திக்கின்றனர்.
கர்ப்பம் அடைந்த பிறகுதான் பெண்களின் உடல்நலத்தில் மாற்றம், குறைபாடுகள் ஏற்படுவதால் இதய நோய் பாதிப்பு இருப்பதை அறிய முடிகிறது. இதய நோய் பாதிப்பு குறித்து நவீன மருத்துவ சிகிச்சை இருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை என்றார் அவர்.
மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் அஷ்ரப் பேசியதாவது:
தற்போது பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்ததால் மனஅழுத்தம் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பேணுவதால் வாழ்க்கை இனிதாகும் என்றார் அவர்.
கருத்தரங்கு மலரை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் வெளியிட்டார். பல்கலைக் கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் சி. ரேவதி பாலன், மருத்துவக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செனாய், ரெங்கநாதன், மகாதேவன், சிவலிங்கம், செந்தில்குமார், குமாரவேல், ராமசுப்பிரமணியன் உள்பட தென்தமிழகத்தை சேர்ந்த 400 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அமைப்பின் தலைவர் எஸ். வேலு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com