தாமிரவருணியில் 120 கி.மீ. தொலைவு தூய்மைப் பணி

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தாமிரவருணியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மைப் பணிக்காக சனிக்கிழமை 60 இடங்களில் 120 கி.மீ. தொலைவுக்கு மாணவர், மாணவிகள்,

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தாமிரவருணியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மைப் பணிக்காக சனிக்கிழமை 60 இடங்களில் 120 கி.மீ. தொலைவுக்கு மாணவர், மாணவிகள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களம் இறங்கி 3 மணிநேரம் பணிபுரிந்தனர்.
தாமிரவருணியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒருங்கிணைந்து தாமிரவருணி கரைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை (செப்.23) ஒருங்கிணைந்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாபநாசம் தொடங்கி திருநெல்வேலி நான்குவழிச் சாலை பாலம் வரையில் (60 கி.மீ. தொலைவு) இரு கரைகளிலும் சேர்த்து 120 கி.மீ. தொலைவுக்கு 60 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 30-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி, பொறியில் கல்லூரிகள், 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர், மாணவிகள், அரசு ஊழியர் சங்கம், தொண்டு நிறுவனம், தனியார் அமைப்புகள் என 5 ஆயிரம் பேர் இணைந்து காலை 7.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையில் இடைவிடாது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பாபநாசம் கோயில் முன்புறம் மற்றும் இடதுபுறம் உள்ள பகுதிகளில் 255 மாணவர்கள், கொட்டாரம் மதுரா கோட்ஸ் ஆற்றுப்பாலம் இருபுறமும் 6 இடங்களில் 600 நபர்கள், ஆலடியூர் ஆற்றுப்பாலம் இருபுறமும் 8 இடங்களில் 800 பேர், அம்பாசமுத்திரம் ஆற்றுப் பாலம் இருபுறமும் 6 இடங்களில் 640 பேர், முக்கூடல் ஆற்றுப்பாலம் இருபுறமும் 6 இடங்களில் 1,500 பேர், சேரன்மகாதேவி ஆற்றுப்பாலம் இருபுறமும் 6 இடங்களில் 860 பேர் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.
தாமிரவருணி ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் கருப்பந்துறை முதல் கைலாசபுரம் வரை 7 இடங்களில் 620 பேர், அரவிந்த் கண் மருத்துவமனை முதல் வடக்கு புறவழிச் சாலை பாலம் வரை 3 இடங்களில் 475 பேர், மணிமூர்த்தீஸ்வரம் கோயில் முதல் புறவழிச் சாலை பாலம் வரையில் 3 இடங்களில் 320 பேர், கிழக்கு கரை பகுதியில் புறவழிச் சாலை பாலம் முதல் வண்ணார்பேட்டை வரை 4 இடங்களில் 425 பேர், எட்டுத் தொகை நகர் முதல் பேருந்து பணிமனை வரை 3 இடங்களில் 400 பேர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் கருப்பந்துறை வரை 6 இடங்களில் 700 பேர் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொக்கிரகுளம் பகுதியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், மக்களவை உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ. பழனி, கோட்டாட்சியர் மைதிலி, அண்ணா பல்கலைக் கழக டீன் சக்திநாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் களத்தில் இறங்கி குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினர்.
பின்னர், மணிமூர்த்தீஸ்வரம் கோயில், உடையார்பட்டி, சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார். இதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது:
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தாமிரவருணி கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒருங்கிணைந்த தூய்மைப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றை தூய்மையாக வைத்திருப்பதுடன் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். மாதந்தோறும் இத்தகைய பணிகள் தொடரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com