பாபநாசம் அணையில் உபரிநீர் திறப்பு: குடியிருப்புக்கு பாதையின்றி தவிக்கும் சின்னமயிலாறு கிராம மக்கள்

பாபநாசம் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதையடுத்து, 4 நாள்களாக குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வழியில்லாமல் சின்னமயிலாறு கிராம காணியின மக்கள் தவித்து வருகின்றனர்.

பாபநாசம் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதையடுத்து, 4 நாள்களாக குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வழியில்லாமல் சின்னமயிலாறு கிராம காணியின மக்கள் தவித்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசம் வனப்பகுதியில் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணியின மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பாபநாசம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் தாமிரவருணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ள சின்னமயிலாறு பகுதியில் 68 குடும்பங்கள் உள்ளன.
இவர்கள் கிராமத்திற்கு தாமிரவருணி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாபநாசம் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால், ஆற்றைத் தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்படும். கடந்த 4 நாள்களாக பாபநாசம் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதால், சின்னமயிலாறு செல்வதற்கு வழியில்லாமல் காணியின மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சின்னமயிலாறைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், இந்தப் பகுதியில் காலம்காலமாக 68 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பாபநாசம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும் போதெல்லாம் கிராமத்திற்குள் செல்ல வழியில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது 4 நாள்களாக அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதால், கிராமத்திலிருந்து வெளியேற முடியவில்லை. சமையலுக்குத் தேவையான பொருள்கள்கூட வாங்க முடியாமல், உணவின்றி தவிக்கும் நிலை உள்ளது. சனிக்கிழமை ரேஷனில் பொருள்கள் வழங்கும் நிலையில், அதை வாங்கச் செல்ல முடியவில்லை. இதனால், ஆற்றின் குறுக்கே சுமார் 100 மீ. நீளத்திற்கு மரப்பாலம் அமைத்து வருகிறோம். ஒவ்வொரு முறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும் போதும் இதே நிலை ஏற்படுகிறது. உபரி நீர் திறந்துவிடப்பட்டு 4 நாள்களாகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வந்து பார்க்கவில்லை என்றார்.
ராஜா என்பவர் கூறுகையில், நான் விக்கிரமசிங்கபுரத்தில் ஐடிஐ படித்து வருகிறேன். இதேபோல, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏராளமாக இங்கு உள்ளனர். ஆனால், அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் போது மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. அதேபோல, கர்ப்பிணிகள், முதியோர் இங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. நாங்கள் ஒவ்வொரு முறை தற்காலிகமாக அமைத்துக் கொள்ளும் மரப்பாலம் வழியாக ஆண்கள் மட்டுமே செல்ல முடிகிறது. பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இங்கு மின்சார வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியாமல் உள்ளனர். எனவே, ஆற்றை கடப்பதற்குப் பாலமும், மின்சார வசதியும் செய்துகொடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நடவடிக்கை எடுக்கப்படும்: இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி கூறுகையில், சின்ன மயிலாறு மக்கள் பாலம் அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com