களக்காட்டில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டவாழைத்தார் சந்தை திட்டம் உயிர்பெறுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட வாழைத்தார் சந்தை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட வாழைத்தார் சந்தை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. 
களக்காடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான், நான்குனேரி வட்டத்தில் உள்ளநூற்றுக்கும் மேற்பட்ட  பாசனக் குளங்களுக்கு நீராதாரம். களக்காடு, திருக்குறுங்குடி, மாவடி, பத்மனேரி, மலையடிப்புதூர், ராஜபுதூர், சிதம்பரபுரம், பத்தை, மஞ்சுவிளை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஏத்தன் ரக வாழைகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். களக்காடு சுற்று வட்டாரத்தில் விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்களுக்கு கேரளச் சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் பயிர் செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழையின்மை, உரம் விலை உயர்வு, வாழைகளைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய சவுக்கு கம்பு விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே பயிர் செய்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறைக்காற்று காரணமாக வாழைகள் சேதமடைவது தொடர்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, கேரளச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த லாபமே கிடைக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் சந்தைகளுக்கு வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தால், விலை திடீரென பல மடங்கு குறையும் நிலையும் உள்ளது.
கொள்முதல் மையமும், கிடங்கும்: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகமாக கேரளச் சந்தைகளுக்கு வாழைத்தார்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும்; பதப்படுத்துதல் கிடங்கு அமைக்கும்பட்சத்தில் வாழைத்தார்களை பதப்படுத்தி வைத்து, விலை அதிகமாக உள்ள நேரங்களில் கேரளச் சந்தைகளுக்கு கொண்டு சென்று லாபம் ஈட்டலாம் என விவசாயிகள் நம்புகின்றனர். 
களக்காட்டில் வாழைத்தார் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தினர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், வாழைத்தார் கொள்முதல் மையம் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து வலியுறுத்தினார். அதன் காரணமாக அப்போதைய ஆட்சியர் மு. ஜெயராமன் பலமுறை களக்காடு வந்து வாழைத்தார் கொள்முதல் மையத்துக்கான இடங்களைத் தேர்வு செய்தார். 
அதன் பின் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட சி. சமயமூர்த்தியும் களக்காட்டில் வாழைத்தார் கொள்முதல் மையம் அமைய தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அப்போதைய திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு, சந்தை இடத்தை ஆய்வு செய்து உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரைத்தார்.
ஆனால் அதன்பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது; விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து ஆட்சியரிடம் வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி. பெரும்படையார்.
மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதுடன், கிராமப்புறங்களில் சந்தைகள் அமைக்கவும், பதப்படுத்துதல் கிடங்கு அமைக்கவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  எனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள விவசாயிகளின் இக் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை.

வள்ளியூரில் விரைவில் வாழைத்தார் சந்தை திறப்பு
இது தொடர்பாக வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,  அவர்கள் கூறியதாவது: களக்காட்டில் வாழைத்தார் சந்தை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு தருமாறு வருவாய்த் துறையிடம் வேளாண் விற்பனைத் துறை மூலம் கேட்கப்பட்டது. ஆனால் வருவாய்த் துறையோ, குத்தகைக்கு தர மறுத்ததோடு, சந்தை மதிப்பின்படி முழுத் தொகையை செலுத்தி இடத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டது. வேளாண் விற்பனைத் துறையில் போதிய நிதி இல்லாததால், அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. 
களக்காடு, வள்ளியூர், ராதாபுரம், நான்குநேரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. அதைக் கருத்தில் கொண்டு மத்தியப் பகுதியான வள்ளியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வாழைக்கென பிரத்யேகமாக விற்பனை மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விற்பனை மையம் வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.  வாழைத்தார்களை சேகரிப்பதற்காக களக்காடு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் பிரத்யேக மையங்கள் அமைக்கப்படும். களக்காட்டில் மட்டும் 10 பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும். அங்கிருந்து வாகனம் மூலம் வள்ளியூருக்கு வாழைத்தார்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com