காட்டுப்பன்றிகளால் நெல், பயறுவகைப் பயிர்கள் சேதம்: குறைதீர் கூட்டத்தில் புகார்

காட்டுப் பன்றிகளால் நெல், பயறுவகைப் பயிர்கள் மிகவும் சேதமடைந்து வருவதால் வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

காட்டுப் பன்றிகளால் நெல், பயறுவகைப் பயிர்கள் மிகவும் சேதமடைந்து வருவதால் வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் மைதிலி தலைமை வகித்தார். திருநெல்வேலி, மானூர், பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டத்திற்குள்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
விவசாயிகள்: தாழையூத்து அடுத்துள்ள தென்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது பிசான பருவ சாகுபடியையொட்டி நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மலைக்குன்றுகளில் பதுங்கி வசிக்கும் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் வயல்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. பயறுவகைப் பயிர்களும் சேதமாகியுள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வனத்துறை மூலம் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டாட்சியர்: இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
விவசாயிகள்: திருவேங்கடம் வட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் உளுந்து, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. சாகுபடி தொடங்கி 50 ஆவது நாளில் பயறு வரும் பருவத்தில் மஞ்சள் நோய் தாக்கி மகசூல் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பழங்கொட்டை பிர்கா, கரிசல்குளம் பிர்கா, திருவேங்கடம் பிர்காவுக்குள்பட்ட சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அதிகாரிகள்: விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய பல்வேறு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில நாள்கள் அவகாசம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை நாடி முதலில் காப்பீடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்: பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் மீன்பாசி குத்தகையை பகிரங்கமாக விடாமல் அதிகாரிகள் தன்னிச்சையான முடிவு எடுத்துள்ளதால் அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
அதிகாரிகள்: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் தெரிவித்து விசாரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com