நெல்லை மாவட்டத்தில் வெப்பத்தை தணித்த மழை: களக்காடு பகுதியில் அறுவடை பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு தினங்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு தினங்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
வடகிழக்குப் பருவமழை முடிந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெப்பமும் இருந்து வருகிறது. இதனிடையே, திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து இம்மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணையில் 39 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 8 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 14.8 மி.மீ., கன்னடியன் அணைக் கட்டில் 17 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 10.2 மி.மீ., சேரன்மகாதேவியில் 13 மி.மீ., பாளையங்கோட்டையில் 7 மி.மீ.,  சிவகிரியில் 4 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. தென்காசி, செங்கோட்டை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை,  சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, ஆய்க்குடி உள்பட பல இடங்களில் செவ்வாய்க்கிழமை பரவலாக மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
களக்காட்டில் அறுவடை பாதிப்பு: களக்காடு வட்டாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரை பெய்த வடகிழக்குப் பருவமழையால் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளும், 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும் நிரம்பின. இதையடுத்து, நெல் நடவுப் பணிகள் நடைபெற்றன. கடந்த 2 மாதங்களாக வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. எனினும், கொடுமுடியாறு அணை பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே வறண்டுவிட்ட நிலையில், பச்சையாறு அணையில் 5 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. பாசனக் குளங்களிலும் தண்ணீர் வற்றிவிட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வாழை விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருந்தது.
இந்த நிலையில், களக்காடு வட்டாரத்தில் பெய்த திடீர் மழையால், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நெல் அறுவடைப் பணிகள் பாதிப்படைந்துள்ளன. நெல் பயிர் சாய்ந்துள்ளதாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ஆனால், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளது. கடந்த 3 மாதங்களாக வாழை விவசாயிகளுக்கு மழை பெய்யாததால் வாழைத்தார்கள் போதிய விளைச்சலின்றி பாதிக்கப்பட்டன. தற்போது பெய்துள்ள மழையால் வாழைத்தார்கள் நல்ல விளைச்சலை எட்ட வாய்ப்பிருப்பதாக வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com