நெல்லையப்பர் கோயிலில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் தரிசனம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறை, வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பின்னர் அவர்கள் திருநெல்வேலியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 40 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் வெளிபிரகாத்தில் சுமார் 3 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். 
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த ரகுராமன்-பார்வதி தம்பதி கூறியது: தாமிரவருணி மஹா புஷ்கரத்தில் பங்கேற்க குடும்பத்துடன் வந்தோம். இங்குள்ள நெல்லையப்பர் கோயிலில் சுவாமி-அம்மனை தரிசனம் செய்தோம். இசைத்தூண்கள், தெப்பக்குளம், கல்மண்டபங்கள் ஆகியவை குழந்தைகளுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஏராளமான பக்தர்கள் ஒரே நாளில் குவிந்ததால் 2 மணி நேரத்துக்கு பின்பே தரிசனம் செய்தோம். இருந்தாலும் மிகவும் மனமகிழ்ச்சியோடு செல்கிறோம் என்றனர்.
விழிப்புணர்வு: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் பன்னிரு திருமுறை நூலுடன் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நந்திக்கொடி ஊர்வலத்துக்கு பின்பு கோயில்களில் செய்யும் உழவாரப் பணிகளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பின்னர் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புஷ்கர விழாவுக்காக வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உழவாரப் பணியிலும் பங்கேற்றனர்.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து பாபநாசம், திருப்புடைமருதூர், முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com