பாகிஸ்தானால் முடக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி இணையதளம்

பாகிஸ்தான் இணையதள முடக்கர்களால் (ஹேக்கர்ஸ்) திருச்சி மாநகராட்சியின் இணையதள பக்கம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை முடக்கப்பட்டது.

பாகிஸ்தான் இணையதள முடக்கர்களால் (ஹேக்கர்ஸ்) திருச்சி மாநகராட்சியின் இணையதள பக்கம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை முடக்கப்பட்டது.
தமிழக இணையதளங்கள் முடக்கப்படுவது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் கணினிகளை இயக்க முற்பட்ட போது, www.trichycorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி கணினி பொறியாளருக்கும், ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் கணினியை ஆய்வு செய்தபோது, கணினி சர்வர் உள்ளிட்டவை பாகிஸ்தான் இணையதள முடக்கர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் முடக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதில், காஷ்மீர் பிரிவினை வாதம் தொடர்பான கருத்துகளும், குழந்தைகள், பெண்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் உள்ளிட்ட வாசகங்களும் இடம்பெற்றிருந்தன என கணினி பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பொறியாளர்கள் இணையதளப் பக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்தனர். எனினும், இணையதள பக்கத்தில் இருந்து சில தரவுகள் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது:
திருச்சி மாநகராட்சி இணையதளம் பாகிஸ்தான் முடக்கர்களால் (ஹேக்கர்ஸ்) முடக்கப்பட்டது சனிக்கிழமை காலை தெரியவந்தது. சிறிது நேரத்தில் இது சரிசெய்யப்பட்டது.
இணையதள முடக்கம் குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம். போலீஸ் விசாரணையின் முடிவிலேயே இதன் நோக்கம் தெரியவரும் என்றார் அவர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மாநகராட்சியின்  இணையதளம் வைரஸ்களால் பாதிக்கப்படாதபடி செயல்பட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்கி வந்தது. அதையும் மீறி உள்ளே புகுந்து இணையதளத்தை முடக்குவது கைதேர்ந்தவர்களால்தான் சாத்தியம். அப்படி ஈடுபட்டவர்கள் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்றனர்.
இதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலிலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கணினி செயல்பாடுகள் முடக்கப்பட்டு, பின்னர் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com