கோட்ட அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை

திருச்சியில் கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு பாதுகாப்புக் கருவிகளை வழங்கவில்லை எனக் கூறி  பொன்மலை கோட்ட அலுவலகத்துக்கு

திருச்சியில் கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு பாதுகாப்புக் கருவிகளை வழங்கவில்லை எனக் கூறி  பொன்மலை கோட்ட அலுவலகத்துக்கு பூட்டு போட்டு, துப்புரவுப் பணியாளர்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகரில் சாக்கடைகளில் மலம் அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது, அவ்வாறு ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவையடுத்து, ஏற்கெனவே இப்பணியில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்கள், மலம் அள்ளும் பணியில் ஈடுபடமாட்டோம் என அறிவித்தனர். 
மேலும், தாங்கள் சார்ந்த சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த யாரும் இப்பணியில் ஈடுபடமாட்டார்கள் என அறிவித்திருந்ததால், மாநகராட்சி நிர்வாகம்,  ஒப்பந்தததாரர்கள் மூலம்  சாக்கடைகளை அள்ளும் பணியை மாநகரில் மேற்கொண்டுவந்தது. இந்த நிலையில்,  டிவிஎஸ் டோல்கேட் பகுதியில்  வியாழக்கிழமை மதியம் சாக்கடைக் கழிவுகளை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, அங்கு சென்ற 
சிஐடியு துப்புரவுப் பணியாளர்கள், எந்தவித பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் சாக்கடைகளுக்கு இறங்கி ஏன் பணியாற்றுகிறீர்கள் எனக் கூறி, பணியை நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதும், தற்போது கட்டுமானத் தொழில் பாதிப்பால், ஒப்பந்ததாரர் இப்பணிக்கு தங்களை அழைத்து வந்து விட்டதாகவும் அத்தொழிலாளர்கள் தெரிவிதத்தனர்.
இதைத் தொடர்ந்து அருகிலிருந்த பொன்மலை கோட்ட அலுவலகத்துக்குச் சென்ற துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து காவல்துறையினர் வந்த நிலையில், ஒரு மணி  நேரத்துக்கும் மேலாக மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த துப்புரவுப் பணியாளர்கள்  கோட்ட அலுவலக நுழைவுவாயிலுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி, செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து துப்புரவுப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,  வியாழக்கிழமை பணியில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு இழப்பீடுத் தொகை ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து  முற்றுகைப் போராட்டத்தை துப்புரவுப் பணியாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com