துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு

துவரங்குறிச்சி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்கு பிறகு  உறவினர்களிடம் வியாழக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில், வடசேரி பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள், 5 ஆண்கள், 3 குழந்தைகள் என 14 பேர் வாடகை வேனில் திருப்பதி செல்ல புறப்பட்டு வந்தனர். மதுரை வந்து ஹோட்டலில் இரவு உணவருந்திய பிறகு திருச்சி நோக்கி வந்தனர்.  வேனை ஆரல்வாய்மொழி, தோவாளையைச் சேர்ந்த ஓட்டுநர் ராகேஷ் (37) ஓட்டி வந்தார். 
துவரங்குறிச்சி அருகே வந்தபோது சாலையோரம் நின்ற போர்வெல் லாரியின் பின்னால் வேன் மோதியது. இதில், வேனில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த நடராஜன் (45), வேலம்மாள் (48), அய்யப்பன் (52), சந்திரகுமார் (46), புஷ்பகலா (68), வைத்தியலிங்கம் (79), ஈஸ்வரன் (28), நீலா (22), நந்தீஸ் (5), ஜெயச்சந்திரன் (10)  ஆகிய 10  பேர் உயிரிழந்தனர்.  மேலும், 5 பேர் பலத்தக் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் வைஷ்ணவி (21), கழுத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 12 வயது சிறுவன் கார்த்திக் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தானம்மாள் (42), வேலாதேவி (35) ஆகிய இருவரும் தலைக்காய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஓட்டுநர் ராகேஷும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை  மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  காயமடைந்தவர்கள் சந்தித்தும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த 10 பேரின் சடலங்களை விரைந்து பிரேத பரிசோதனை முடித்து உடனடியாக இறப்பு சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட்டார்.
இதன்படி,  பிரேதப் பரிசோதனை முடிந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு 5 அமரர் ஊர்தி வாகனங்களில் 10 சடலங்களும் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஊர்தி ஓட்டுநர்களுக்கு செலவுக்காக ரூ. 6ஆயிரத்தை ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி, இருங்களூர், சிறுகனூர் ஆகிய 3 இடங்களில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. உயிரிழப்புகளும் அதிகமாகிறது. எனவே, இந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து கள ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதன்படி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாகர்கோவிலில்இருந்து வந்த வேனை ஓட்டிய ஓட்டுநரின் அஜாக்கிரதையாலும், வேகத்தாலுமே விபத்து நேரிட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து, நாகர்கோவில் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


குழந்தை வரம் வேண்டி வந்ததில் குடும்பத்தை தொலைத்த சோகம்
விபத்தில் இறந்தவர் குடும்பத்தினர் குழந்தை வரம் வேண்டி திருப்பதிக்கு வந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த புஷ்பகலா என்பவரின் சகோதரி ராஜேஸ்வரி கூறியது: எனது சகோதரி புஷ்பகலா, அவரது கணவர் வைத்தியலிங்கம், மகன் ஈஸ்வரன், மருமகள் நீலா உள்ளிட்ட உறவினர்கள் திருப்பதிக்கு புறப்பட்டனர். திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் ஈஸ்வரனுக்கு குழந்தை இல்லாததால், வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றனர். இப்போது எனது சகோதரி குடும்பத்தையே தொலைவிட்டு நிற்கிறேன் என்றார்.

போர்வெல் லாரி ஓட்டுநர் கைது
விபத்துக்கு காரணமான போர்வெல் லாரி ஓட்டுநர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர், விபத்து நடந்தபோது சாலையோரம் தனது போர்வெல் லாரியை நிறுத்த முயன்றார். பின்னால் வரும் வாகனத்துக்கு எச்சரிச்சை அறிவிப்பு தெரிவிக்காமல் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த வேன் முந்திச் செல்லவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் லாரியில் மோதியதாக போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து லாரி ஓட்டுநரை துவரங்குறிச்சி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com