மரக்கடை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி மரக்கடை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட  பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

திருச்சி மரக்கடை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட  பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை , மதுரைசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கு முன்பு செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வந்த புகாரைத் தொடந்து  ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.   ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு தண்டோராவும் போடப்பட்டது.
மாநகராட்சி நிர்ணயித்த கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாததால்,  அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில், உதவிச் செயற்பொறியாளர் குமரேசன்,  சுகாதார ஆய்வாளர் பரசுராம்  மேற்பார்வையில்  மாநகராட்சிப் பணியாளர்கள் 6 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கடைகளுக்கு முன்பு செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
திருச்சி காந்தி மார்க்கெட், வெங்காய மண்டி, வெல்லமண்டிசாலை,  பாலக்கரை ரவுண்டானாவிலிருந்து மதுரை சாலை வரையிலான பகுதிகளில் சாலையின் இருபுறமும் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டன.
வாக்குவாதம் : பாரபட்சம் அல்லாது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி வியாபாரிகள் சிலர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான அறிவிப்பு செய்யப்பட்ட பிறகுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என்று பதிலளித்து, மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பணியை  மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கான பாதுகாப்பில் 100 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com