ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: அனைத்து துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒங்கிணைப்புக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒங்கிணைப்புக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது: ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இந்த விழாவை கடந்த ஆண்டுகளைப் போன்று சிறப்பாக நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
மாநகராட்சி சார்பில், ஸ்ரீரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்களுக்கு வசதியாக தடுப்புகள் அமைக்க வேண்டும். கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதுடன், முக்கிய திருவிழா நாள்களான டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில்
நாள் முழுவதும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். ஆங்காங்கே தாற்காலிக குடிநீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும்.
அம்மாமண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பொதுமக்கள் இரவு, பகல் எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்க வேண்டும். சீரான, தடையின்றி மின்சாரம் வழங்கப்படும்.  முக்கிய விழாக்களில் சிறப்பு ரயில்கள் இயக்கவும், அனைத்து விரைவு ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதலான இடஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அவசர தேவைக்கு கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்படும். தீயணைப்புத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக கோயிலினுள் தகரப் பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும்.
இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேர மருத்துவ முகாம்களும் நடைபெறும். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உடன் தயார் நிலையில் இருப்பர்.
அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுசெய்து தரமான உணவு வகைகள் வழங்க வேண்டும். உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதையும், கூடுதல் விலையில் விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டும், விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள், பழங்கள் ஆகியவற்றில் ரசாயன கலவை கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர். இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், மாநகரக் காவல்துறை துணை ஆணையர்கள் சக்திகணேஷ், மயில்வாகனன் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com