விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி  பிரசார இயக்கம், ஆர்ப்பாட்டம்: இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவர் கே. பி. ராமலிங்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில்  ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரையில் பிரசார இயக்கமும், ஆகஸ்ட்  10ஆம் தேதி முதல் 15ஆம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில்  ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரையில் பிரசார இயக்கமும், ஆகஸ்ட்  10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி  வரை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என  இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவரும், திமுக விவசாய அணி மாநிலச் செயலாளருமான கே. பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 25 விவசாய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: பாஜக மற்றும் மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் விவசாய விரோத கொள்கைகளால் விவசாயம் பெரும் நெருக்கடி சந்தித்து வருகிறது.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க  தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பிரசார  இயக்கமும்,  ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 15 வரை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயிர்காப்பீட்டுத் திட்டத்தை தனியார் வங்கிகளிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.  காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைத்து,  தமிழகத்துக்கு வறட்சி நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்குவதுடன்,  கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்ய விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும்.
நடப்பாண்டில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.  பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயிக்க வேண்டும்.  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.  விவசாய இடுபொருள்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்களிக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்.  தத்கல் முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திப்பது, நதிநீர் பிரச்னைகளால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், ஆளுநர் சதாசிவம், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து நதிகள் இணைப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கடன்கள் தள்ளுபடி, விளைப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம், காவிரி ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தப்படும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு (தென்னிந்திய நதிகள் இணைப்பு), ராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள்), கு. செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பவன்குமார் (காங்கிரஸ் விவசாயப் பிரிவு), தெய்வசிகாமணி (மஞ்சள் விவசாயிகள்), பி.ஆர். பாண்டியன் (விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு), இந்திரஜித் (இந்திய கம்யூ. விவசாயிகள் சங்கம்) உள்ளிட்ட சுமார் 25 விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com