ஆற்றுநீர்ப் பாதுகாப்பு பாராளுமன்றம் அமைப்பு

தமிழகத்தில் பாயும் 5 முக்கிய ஆறுகளின்  இயற்கைச்சூழலையும், நீராதார மேம்பாட்டையும் மீட்டெடுக்கும் நோக்கில் ஆற்றுநீர்ப் பாதுகாப்பு பாராளுமன்றம்

தமிழகத்தில் பாயும் 5 முக்கிய ஆறுகளின்  இயற்கைச்சூழலையும், நீராதார மேம்பாட்டையும் மீட்டெடுக்கும் நோக்கில் ஆற்றுநீர்ப் பாதுகாப்பு பாராளுமன்றம் என்னும் தன்னார்வ மக்கள் பங்கேற்பிற்கான செயல்பாட்டு இயக்கம்  திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் செயல்பாடு குறித்து  மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் குருசாமி கூறியது: தமிழக அரசின் ஒத்துழைப்போடு காவிரி, வைகை, தாமிரவருணி, தென்பெண்னை, பாலாறு ஆகிய 5 ஆறுகளுக்கும் தனித்தனியே ஆற்றுநீர்ப் பாதுகாப்பு பாராளுமன்றம் இயங்கும்.  ஒவ்வொன்றிலும் தலைவர், செயலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு ஆற்றுப்படுகைகளில் அமைந்துளள கிராமசபை, ஒன்றியம்,  பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் இருந்து தன்னார்வமாக செயல்பட விரும்பும் தண்ணீர்ப் பாதுகாப்பு தூதுவர்கள்  பாராளுமன்றத்தை தேர்வு செய்யும் அடிப்படை உறுப்பினர்களாவர்.
கிராமங்களில் செயல்படும் தண்ணீர்ப் பாதுகாப்பு தூதுவர்கள் ஒன்றிய அளவில் ஒருங்கிணைப்பாளர்களையும், மாவட்ட அளவில் தண்ணீர் பாதுகாப்பு மேலாளர்களையும், ஆற்றுப் பாராளுமன்றத்தின் தலைவர்,செயலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வர். பத்து ஆண்டுகள் தொடர்ந்து  செயல்படுத்தப்படும் இந்த அமைப்பு ஒரு தன்னார்வ அமைப்பாக அரசின் ஒத்துழைப்புடன் செயல்படும்.
தமிழக ஆறுகளின் பழைய நிலையை மீட்டெடுத்து தண்ணீர் சேகரிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு, பயிற்றுவிக்கப்பட்ட நீர் உபயோகம் ஆகியவை குறித்து நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிதல்,  நதிநீர் ஓட்டத்தை தடை செய்யும் இயற்கையான தடைகளையும், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள  ஆக்கிரமிப்புகளையும் அகற்றுதல். அதற்கானசெயல் திட்டங்களை கிராம அளவில் மக்கள் பங்கேற்புடன் நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தாமிரவருணி , வைகை, காவிரி, பாலாறு, தென்பெண்னை ஆறு பாதுகாப்பு இயக்கங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தனித்தனியே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்களாக வழக்குரைஞர் த.குருசாமி, தனராஜ், ஹோசூரதுரைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில்,  மகாதானபுரம் ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com