திருச்சி-ஈரோடு ரயில் பாதையை மின்மயமாக்க அனுமதி: தெற்கு ரயில்வே பொது மேலாளர்

திருச்சி - ஈரோடு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.

திருச்சி - ஈரோடு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
 நாடு முழுவதும் ரயில்வே மண்டல மற்றும் கோட்ட அலுவலகங்களின் முன் பழங்கால ரயில் என்ஜின்கள் பொதுமக்கள் பார்வைக்காகவும், ரயில்வே துறையின் அடையாளமாகவும் நிறுவப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்தின் முன், இந்திய அளவில் முதல்முறையாக ரயில் பெட்டியுடன் கூடிய நீராவி என்ஜின் பொதுமக்கள் பார்வைக்காக நிறுவப்பட்டுள்ளது.
வழக்கமாக ரயில் என்ஜின் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், ரயில் பெட்டியுடன் கூடிய என்ஜின் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி ரயில் என்ஜின் அமைப்பினை பொதுமக்கள் பார்வையிட திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஈரோடு ரயில் நிலையத்தில் தொலைதூர ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஈரோடு ரயில் நிலையம் தண்ணீர் நிரப்புவதற்கான முக்கியமான ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
 காவிரி ஆற்றின் மையப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நீரைக் கொண்டு ஈரோடு ரயில் நிலையத்தில் தொலைதூர ரயில்களுக்கு தேவையான தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு விட்டன.
 திருச்சி - கிருஷ்ணராஜபுரம், கோவை - கிருஷ்ணராஜபுரம், கோவை - ராமேசுவரம், சேலம் - கரூர் உள்ளிட்ட இடங்களுக்கான கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் பெட்டிகள் பற்றாக்குறை, குறைவான பயணிகள், போதிய வரவேற்பு இல்லாமை போன்ற காரணங்கலால் சில நேரங்களில் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இருந்தபோதிலும், பொதுமக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது கூடுதல் ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.
 பெரம்பூர், கபூர்தாலா, ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்து தருகிறது. மே மாதத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீட்டின்படி, புதிய ரயில் பெட்டிகள் ஜூலை மாதத்தில் தெற்கு ரயில்வேக்கு கிடைக்கும். புதிய ரயில்கள் இயக்கம் மற்றும் ஏற்கெனவே இயக்கப்பட்டுவந்த ரயில்களில் பெட்டிகள் இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 நாடு முழுவதும் 23 ரயில் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தெற்கு  ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், பாலக்காடு ரயில் நிலையங்கள் தனியார் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.  அடுத்த கட்டமாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். இதில் கோவை, சேலம் ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.
 திருச்சி - ஈரோடு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு ரயில்வே வாரியத்தின் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கான நிதியை பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் அமைப்புகளிடம் இருந்து திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விகால்ப் திட்டம் பரிசோதனை அடிப்படையில் செயல்முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் அந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com