"உலகில் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்வோர் 3.2 கோடி பேர்'

உலகில் 3.2 கோடி மக்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருவதாகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

உலகில் 3.2 கோடி மக்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருவதாகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆன்கோ கிளப் சார்பில் புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தினம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புற்றுநோயிலிருந்து மீண்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்கு முன்னதாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களான டாக்டர்கள் அருண் சேஷாசலம், வி.எல். பாலாஜி, ஜி. செந்தில்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: உடலின் சில இடங்களில் வலியில்லாமல் சதை அணுக்கள் வளர்ந்து பரவுவதும், அதனால் உடலில் ஏற்படும் தாக்கமும் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.
7 லட்சம் புதிய நோயாளிகள்...: மூன்றில் ஒருபங்கு புற்றுநோய் புகையிலை பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஆண்டொன்றுக்கு 7 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். இதில் சுமார் 50 ஆயிரம் பேர் குழந்தைகள்.
நமது நாட்டில் 40 முதல் 60 வயது வரை உள்ளவர்களே அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். திருச்சியில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோயும், ஆண்களுக்கு வாய் புற்றுநோயும், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோயும் அதிகளவில் கண்டறியப்படுகிறது.
குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள் 90 சதவீதம் குணப்படுத்தக் கூடியவை. உலகில் 3.2 கோடி மக்கள் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்ந்து வருகின்றனர். எங்களது ஆன்கோ கிளப்பில் கடந்த 4 ஆண்டுகளில் 6,400 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
உலகில் புற்றுநோய் தாக்கத்தால் உயிரிழப்போரில் 3 இல் ஒரு சதவீதம் பேர் இந்தியர்களே. மேலை நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 50 முதல் 60 சதவீதம் வரை குணப்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் இது 30 சதவீதமாகவே உள்ளது. இதற்கு பொதுமக்கள் பரிசோதனைக்கு வர தயக்கம் காட்டுவதும், புற்றுநோய் குறித்த அறியாமையுமே காரணம்.
புகையிலையை தவிர்க்க வேண்டும்...: புகையிலை பொருள்கள் உபயோகித்தலை நிறுத்துதல், மது குடித்தலை தவிர்த்தல், உடல் பருமனை குறைத்தல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையும், பெண்கள் மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்வதன் வழியாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெற்று குணமடைய முடியும் என்றனர் அவர்கள்.
தொடர்ந்து, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில், மூளை மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எஸ்பி. திருப்பதி, டாக்டர் சுனில் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com