விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டம் மூன்றாண்டுகளில் ரூ.3.05 கோடி மானியத்தில் 97 சோலார் பம்புகள் அமைப்பு

மின்சாரத்தை எதிர்நோக்காமல், மரபுசாரா எரிசக்தியில் இயங்கக்கூடிய சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சோலார் பம்பு

மின்சாரத்தை எதிர்நோக்காமல், மரபுசாரா எரிசக்தியில் இயங்கக்கூடிய சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சோலார் பம்பு அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள இத்திட்டத்தில்,
மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 30 சதவீதம் மானியத்தையும் வழங்குவதால், 20சதவீதம் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தி தங்களது நிலத்தில் சோலார் பம்பை அமைத்துக் கொள்ளலாம்.
ஆழ்துளைக் கிணறு பகுதியாக இருந்தால் 200 அடி ஆழத்துக்கு நீரும், திறந்தவெளிக் கிணறாக இருந்தால் 100 அடி ஆழத்துக்கு நீர்வளமும் உள்ள பகுதிகளில் சோலார் சூரிய பம்புகள் அமைத்துத் தருகிறது வேளாண் பொறியியல் துறை.
தானியங்கி மற்றும் நிலையான என இரு வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்வு தானியங்கி வகை சோலார் தகடுகள் சூரியன் செல்லும் திசையை நோக்கித் திருப்பும் வகையில் தானியங்கி மோட்டார் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலையான வகை சோலார் தகடுகள் சூரிய ஒளியைக் கிரகிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குழாய் கிணற்றில் நிலையான வகை சோலார் பம்புகள் அமைக்க ரூ.4 லட்சம் செலவாகும் என மதிப்பிட்டிருக்கும் நிலையில் விவசாயிகள் ரூ.1 லட்சம் மட்டும் தொகையைச் செலுத்தி சோலார் பம்பை பொருத்திக் கொள்ளலாம். இதுபோல நகர்வு வகை சோலார் பம்புகளுக்கும், திறந்தவெளி கிணற்றில் நகர்வுவகை சோலார் பம்புகள் அமைப்பதற்கு ஆகும் செலவினத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
97 சோலார் பம்புகள்: முதல் இரண்டு ஆண்டுகளில் 67 விவசாயிகளுக்கு ரூ.2.30 கோடி மானியத்தில் சோலார் பம்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், 2016-17ஆம் ஆண்டில் மட்டும் 30 சோலார் பம்புகள் அமைத்து தரப்பட்டுள்ளன.
கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் 2016-17 ஆம் ஆண்டில் சோலார் பம்புகளை அமைக்க விண்ணப்பித்தோரின் எண்னிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் 5 குதிரைத்திறன் சக்தி கொண்ட சோலார் பம்புகள் அமைக்கப்பட்டது. தற்போது 7.5, 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்புகள அமைத்துத் தரப்படுகின்றன. இதுவரை சோலார் பம்பு அமைக்க அரசு வழங்கிய மானியம் ரூ.3.05 கோடியாகும்.
நிகழாண்டிலும் அதிகரிக்க வாய்ப்பு: நிகழாண்டில் 200 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்ப்பதாக வேளாண் பொறியியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்ந்து மோட்டாரை இயக்கலாம். நிலையான வகை சோலார் பம்புகள் மூலம் நாளொன்றுக்கு 87,000 லிட்டரும், நகர்வுகை சோலார் மூலம் 91,000 லிட்டர் தண்ணீரை தினந்தோறும் பெறலாம்.
தடையற்ற பாசனம்: மாதம் குறைந்தது ரூ.12,000 வரை டீசல் என்ஜினுக்கு செல்வு செய்து தண்ணீர் பாய்ச்சி வந்த நாங்கள், தலா ரூ.1 லட்சம் செலுத்தி ரூ.4 லட்சம் மதிப்புள்ள 5 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்புகளை மானியம் பெற்று அமைத்துள்ளோம்.
இதன் மூலம் பகலில் தடையற்ற பாசனம், சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாதது, கச்சா எண்ணெய் பயன்பாடு குறைத்தல், மின்சேமிப்பு மற்றம் எரிபொருள்சிக்கனம் போன்ற பல்வேறு வகைகளில் தனக்கு பெரும் உதவியாக இருப்பதாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் போதாவூர் மற்றும் இனாம் புலியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.
தற்போது வறட்சி நிலவினாலும், நிகழாண்டில் பருவமழை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோடை மழை நன்றாக பெய்தது போன்று, பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செய்ய பாதிப்பு ஏதும் ஏற்படாது என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com