விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டத்தை முகமை வழியே செயல்படுத்தக் கோரிக்கை

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டத்தை முகமை வழியே செயல்படுத்த கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கும் திட்டத்தை முகமை வழியே செயல்படுத்த கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் இச்சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அ. ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா. சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விலையில்லா பொருள்களை வழங்கும் திட்டத்தால், எங்களது அமைச்சுப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, முகமை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும், அமைச்சுப் பணியாளர்களுக்கு விலக்களிக்கவும் வேண்டும்.
அரசு தேர்வுத்துறையால் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை மற்றும் மனஉளைச்சலை கருத்திற்கொண்டு, கூடுதலாக ஒரு பிரிவினை ஏற்படுத்த வேண்டும். மேலும், தேர்வுப் பணிகளிலிருந்து அமைச்சுப் பணியாளர்களுக்கு முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டவர்களுக்கு முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். நிதிஉதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
நேரடி உதவியாளர்கள் நியமனத்தினை கைவிட வேண்டும். நீதிமன்ற வழக்குகளால் ஏற்படும் மனஉளைச்சலை தவிர்க்கும் விதமாக மாவட்டம் தோறும் சட்ட அலுவலருடன் கூடிய ஒரு பிரிவினை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தீர்மானங்களை விரைவில் கல்வி அமைச்சரிடம் வழங்குவோம் என்றார் அவர்.
கூட்டத்தில் முன்னதாக, மாவட்ட செயலாளர் க. குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் நா. பாலசுப்பிரமணியன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com