ஓஎஃப்டியை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஜூன் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு அறிவிப்பு

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையை (ஓஎஃப்டி) தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ஜூன் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்

திருச்சி படைக்கலத் தொழிற்சாலையை (ஓஎஃப்டி) தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ஜூன் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.
 மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ், இந்தியாவில் 41 படைக்கலத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தனியார் மயம்....: இதில் திருச்சி, கான்பூர், கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய 4 பகுதிகளில் இயங்கும் சிறிய ரக ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தனியார் மயமாக்க மத்திய அரசு பரிசலீத்து வருகிறது.
பல்வேறு போராட்டங்கள்...: தனிமயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மேற்கண்ட 4 இடங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதே போல, திருச்சி நவல்பட்டில் இயங்கி வரும் படைக்கலத் தொழிற்சாலையும்  தனியார் மயமாக இருப்பதைக் கண்டித்து திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை எம்ப்ளாயீஸ் யூனியன்,  தொமுச, பிஎம்எஸ், ஐஎன்டியூசி, அம்பேத்கர் யூனியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வாக்கெடுப்பு...: இந்நிலையில் அனைத்துத் தொழிற்சங்களும் இணைந்து திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கடந்த 7, 8, 9-ஆம் தேதிகளில் தொழிற்சாலையின் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தனியார்மயத்தைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென பெரும்பாலானோர் வாக்களித்தனர்.
ஆர்ப்பாட்டம்...: இதையடுத்து திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு சார்பில் ஆலையின் வாயில் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும்  வாயிற் கூட்டமும் நடைபெற்றது. இதற்கு ஓஎஃப்டி தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளரும், தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளருமான சரவணன் தலைமை வகித்தார். பாரதீய மஸ்தூர் சங்க பொதுச்செயலாளர் அருள் சேவியர், தொமுச பொதுச் செயலாளர் நாகராஜ், ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் சந்திரசேகரன், அம்பேத்கர் யூனியன் பொதுச் செயலாளர் அன்பழகன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜூன் 27 முதல் வேலைநிறுத்தம்...:  இதில்,  துப்பாக்கித் தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை ஜூன் 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, ரயில்வே, பெல் தொழிற்சாலைகள் உள்பட மத்திய அரசின் அனைத்துத் தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்கள், எம்பி-க்கள், அனைத்துக் கட்சிகள் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி மக்களிடையே பிரசாரம் மேற்கொள்வது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சரவணன் தெரிவித்தார்.   இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆலையின் பொது மேலாளர் கே. அப்பாராவிடம் ஜூன் 27-ஆம் தேதி முதல் மேற்கொள்ள உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்த நோட்டீஸை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com