லத்தி அடியால் இளைஞர் காயம்: எஸ்எஸ்ஐ இடமாற்றம்

காவல் நண்பர் குழுவைச் சேர்ந்தவர் லத்தியால் தாக்கியதில் இளைஞர் காயமடைந்ததை அடுத்து அப்பகுதி ரோந்து எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

காவல் நண்பர் குழுவைச் சேர்ந்தவர் லத்தியால் தாக்கியதில் இளைஞர் காயமடைந்ததை அடுத்து அப்பகுதி ரோந்து எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மேலப்புதூர் அருகே சனிக்கிழமை நள்ளிரவு எஸ்.எஸ்.ஐ. சீனிவாசன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் போலீஸ் வாகன ஓட்டுநர், காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஷெரில் என்ற இளைஞர் ஆகியோர் இருந்தனர்.அப்போது, தென்னூர் அண்ணா நகரைச் சேர்ந்த காதர்மொய்தீன் (27) தனது நண்பர் சித்திக்குடன் (25) இருசக்கர வாகனத்தில் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் நோக்கிச் செல்ல அப்பகுதி வழியே வந்தார். அவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சோதனை செய்வதற்காக தடுத்தபோது நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த ஷெரில், வாகன ஓட்டிகள் மீது லத்தியைக் கொண்டு தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காதர்மொய்தீன் தலையில் காயம் ஏற்பட்டது.
சாலை மறியல்...:  தகவலறிந்து அங்கு வந்த காதர்மொய்தீனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 200-க்கும் மேற்பட்டோர், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே வந்த பேருந்துகள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன.
 தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் உதவி ஆணையர் சீனிவாசப் பெருமாள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட காவல் நண்பர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். காயமடைந்த காதர்மொய்தீன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்எஸ்ஐ மாற்றம்...:
இந்நிலையில், சம்பவத்தின் போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ சீனிவாசனை ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com