சாலை வசதி மேம்பட்டும்குறையாத விபத்துகள்

வெளிநாடுகளுக்கு இணையான வகையில் இந்தியாவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தமிழகம் சாலை விபத்துகளில் முதலிடத்தையும், உயிரிழப்பு ஏற்படுவதில் 2- ஆம்

வெளிநாடுகளுக்கு இணையான வகையில் இந்தியாவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தமிழகம் சாலை விபத்துகளில் முதலிடத்தையும், உயிரிழப்பு ஏற்படுவதில் 2- ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் சாலை வசதி வடமாநில மெட்ரோ நகரங்களுக்கு இணையான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தங்க நாற்கரத் திட்டத்துக்கு பின்னர், சாலை அபிவிருத்தித் திட்டம் மூலம் நாட்டின் அனைத்து மாநில முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், சாலைகள் மேம்படுத்தப்பட்டு, மாவட்ட, மாநில தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் தங்க நாற்கர சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் கி.மீ., நீளத்துக்கு தரமான மேம்படுத்தப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டுதோறும் ஏற்படும் சாலை விபத்துகளில் சுமார் 1 லட்சம் பேர் இறப்பதுடன், சுமார் 5 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். கடந்தாண்டு மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 பேர் மரணம் அடைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தமிழகம் சாலை விபத்துகளில் முதலிடமும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2- ஆம் இடத்தையும் வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 69 ஆயிரம் விபத்துகள் மூலம் 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்தாண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 642 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்த சாலை விபத்துகளில் சுமார் 72 சதவிகித விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிகளை 95 சதவிகிதம் பேர் பின்பற்றுவதில்லை. அவை குறித்து போலீஸாரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இல்லை, விதிமீறுவோர் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக வசூல் செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
தலைக்கவசம் அணிவதை வலியுறுத்துவது, விளக்குகளில் கருப்பு வில்லை ஒட்டுவது போன்றவற்றை வலியுறுத்துவதைதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக பெயரளவில் நடத்தி வருகின்றனர் என்பதுதான் பெரும்பாலானோரின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டங்கள் கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றம் செய்ய யாருக்கும் பயமிருக்கும். எனவே குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவை பொறுத்தவரையில் பணம் பிரதானமாகி விட்டது. அனைத்து குற்றச்சம்பவங்களிலும் அரசியல்வாதிகளின் குறுக்கீடு அதிகரித்து வருகின்றது. எனவே போலீஸாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். அவற்றை முறைப்படுத்த வேண்டுமெனில் சாலைப் பாதுகாப்பு விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
சாதாரணமாக தலைக்கவசம் விஷயத்தில் அக்கறை காட்டிய நீதிமன்றம், கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவது ஏன் என்பதைக் கருத்தில் கொண்டு சாலை விதிகளை பின்பற்ற கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்புவரை வாகனத்தில் செல்வோர் இடதுபுறமாகவே செல்லவேண்டும், முந்துவோர் வலப்புறம்தான் முந்தவேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. அது குறித்த விழிப்புணர்வை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் தற்போதுள்ள நிலையில், இளையோரிடம் அந்த விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.
இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகன ஓட்டிகளும் அவரவர் விருப்பத்துக்கேற்றபடி வாகனங்களை முந்திச்செல்கின்றனர். கனரக வாகன ஓட்டிகள் பலரும் மிதவேகத்துடன் வலப்புறம் ஓரமாகவே (சென்டர் மீடியனை ஒட்டி) செல்வதால், வேகமாக செல்லும் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வேறு வழியின்றி இடப்புறம் முந்திச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதிலும் முந்துச்செல்வோர் மணிக்கு 100 முதல் 150 கி.மீ. வேகத்தில் செல்வதும் வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்துவது யார்? நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏன் கட்டாயமாக்கவில்லை ?
திருச்சி மாவட்டத்தில் 2016- 17ஆம் ஆண்டில் நிகழ்ந்த 562 விபத்துகளில் 583 பேர் இறந்துள்ளனர். விபத்தில் சிக்கி மரணமடைபவர்களில் 52 சதவிகிதத்தினர் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இருசக்கர மட்டுமின்றி நான்கு சக்கர வாகனங்களிலும் இடப்புறம் முந்துவோரில் இளைஞர்கள்தான் அதிகம்.
தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்புக்காக 2011- ஆம் ஆண்டு 15 கோடியாக வழங்கப்பட்ட நிதியை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ. 40 கோடியாக உயர்த்தினார். பின்னர் இறப்பதற்கு முன் ரூ. 65 கோடியாகவும் உயர்த்தினார் என மாநில போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த நிதிகள் முழுமையும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கவே பயன்படுகின்றது.
மாறாக பாதுகாப்புக்காக சிறிது தொகையை ஒதுக்கி தேசிய, மாநில, மாவட்ட நெஞ்சாலைகளில் சுமார் 3 மாத காலம் மட்டும் சாலையோர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றிலும் நான்கு வழிச்சாலைகளை பயன்படுத்தும் விதிமுறைகள் குறித்த விடியோவை பரப்பினால் விபத்துகள் குறைய வாய்புள்ளது.
ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட போலீஸார் இதுகுறித்த சிறந்த விடியோ காட்சியை காட்சிப்படுத்தியுள்ளனர். அதனை மீண்டும் அனைத்து வகையான ஊடகங்கள், வலைதளங்களில் பரப்பினால் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com