பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டமணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர்

மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்திய சில கோரிக்கைகளுக்கு ஓரிரு நாள்களில் தீர்வு காணப்படும் என பொதுப்பணித் துறை

மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்திய சில கோரிக்கைகளுக்கு ஓரிரு நாள்களில் தீர்வு காணப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதியளித்ததால், தங்களின் போராட்டம் தாற்காலிமாக கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மணல் குவாரிகளை அரசு ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை அளித்து மணல் அளிக்கப்படுவதாகவும், இதனால் மற்ற ஊர்களிலிருந்து வரும் மணல் லாரிகளுக்கு காலதாமதம் செய்து மணல் வழங்குவதாகவும் கூறி, மணல் லாரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம், ஏமூரில் செவ்வாய்க்கிழமை 500-க்கும் மேற்பட்ட லாரிகளுடன் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில், தலைமைப் பொறியாளர் பழனிகுமார் தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினருடன் பேச்சுவார்த்தை புதன்கிழமை
நடைபெற்றது.
சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதைத் தொடர்ந்து, அரசு மணல் குவாரிகளில் உள்ளூர் மணல் லாரிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து மணல் வழங்காமல், எல்லோருக்கும் வரிசைப்படி மணல் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
உள்ளூர்வரி, தலவரி என மணல் குவாரிப் பகுதிகளில் பெறப்படும் தொகைகள் வசூல் செய்தல் இனி நடைபெறாது என்றும், மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் தேர்வு செய்து வழங்கும் இடத்தில் பொதுப்பணித் துறை சார்பில் லாரிகள் நிறுத்துமிடத்தை உருவாக்கி, டோக்கன் வழங்கி மணல் எடுக்க லாரிகளை அனுப்புவது, மாவட்டத்தில் காட்டுப்புத்தூர், உன்னியூர் போன்ற பகுதிகளில் விரைவில் மணல் குவாரிகளை திறப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு, இது விரைவாக செயல்படுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தாங்கள் அடுத்தக் கட்டங்களாக மேற்கொள்ளவிருந்த போராட்டங்களை தாற்காலிகமாக கைவிடுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com