'சிற்றிதழ்களே நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரி'

சிற்றிதழ்களே நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரியாகவும், அடையாளமாகவும் விளங்குவதாக சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினரும், துணைப் பேராசிரியருமான இரா. காமராசு தெரிவித்தார்.

சிற்றிதழ்களே நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரியாகவும், அடையாளமாகவும் விளங்குவதாக சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினரும், துணைப் பேராசிரியருமான இரா. காமராசு தெரிவித்தார்.
சாகித்ய அகாதெமியும், திருச்சி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் இணைந்து தமிழ் இலக்கிய ஆளுமை திருலோக சீதாராம் நூற்றாண்டு விழா உரையரங்கத்தை திருச்சியில் சனிக்கிழமை நடத்தின. தூய வளனார் கல்லூரியின் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை துணைப் பேராசிரியரும், சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினருமான இரா. காமராசு பேசியது:
சாகித்ய அகாதெமி மொழி, இலக்கிய வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வருகிறது. ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க 35 வயது வரையிலான இளைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது, குழந்தை இலக்கிய முன்னோடிகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது. இவைமட்டுமின்றி ஆவணப்படம் தயாரித்தல், இலக்கிய ஆளுமைகளுக்கு 200 ஆண்டு, நூற்றாண்டு விழா மற்றும் உரையரங்கு நடத்துவது, பல்வேறு நூல்களை வெளியிடுவது, புத்தகக்காட்சி நடத்துவது, குறைந்த விலையில் நூல்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்துவருகிறது.
இந்த வகையில், தமிழ் இலக்கிய ஆளுமையாக திகழ்ந்த திருலோக சீதாராமின் நூற்றாண்டு உரையரங்கை நடத்துகிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனக்குறிப்பிடும்போது மகாகவி பாரதியிலிருந்து மட்டுமே தொடங்க வேண்டும். தாமிரவருணி கரையில் இருந்து பாரதி மட்டுமல்லாது காவிரிக்கரையிலிருந்து திருலோக சீதாராம் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் கிடைத்துள்ளனர். நதிக்கரையில் நாகரீகம் பிறந்தது என்பது இதற்கு உதாரணமாக உள்ளது. சிவாஜி என்ற சிற்றிதழை நடத்தி பெரும் புகழ் பெற்றவர் திருலோக சீதாராம். தமிழ்ச் சமூகத்தின் மரபுகளாக சிற்றிதழ்கள் திகழ்கின்றன. புதிய படைப்புகளை கொண்டுவரவும், புதிய இலக்கியங்களை உருவாகக்கவும் சிற்றிதழ்கள் பெரிதும் உதவியாக விளங்குகின்றன. அதுமட்டுமின்றி தமிழ்ச் சமூகத்தின், நவீன இலக்கியத்தின் முகவரியும், அடையாளமாகவும் விளங்குவது சிற்றிதழ்கள் மட்டுமே. பாரதியாரை மகாகவியாக ஏற்றுக்கொள்ளாமல் விமர்சனம் செய்த கூட்டத்தினரிடையே பாரதியை மகாகவி என்று ஏற்று அவரின் புகழை பரப்பச் செய்த பெருமை திருலோக சீதாராமுக்கு உண்டு. அவரது நூற்றாண்டு உரையரங்கத்தை சாகித்ய அகாதெமி நடத்துவது மேலும் பெருமைக்குரியது என்றார் அவர்.
தமிழ் எழுத்தாளர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன், சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு உறுப்பினர் சொ.சேதுபதி, திருலோக சீதராமின் புதல்வர் சுப்பிரமணியன் சீதாராம், தூய வளனார் கல்லூரி செயலர் ஏ. அந்தோனி பாப்புராஜ் , தமிழ்த்துறை தலைவர் பி.செல்வக்குமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அமர்வுகளில் திருலோக சீதாராமின் சிறப்புகள் குறித்து எழுத்தாளர்கல் தி.ந.ராமச்சந்திரன், நா. விஸ்வநாதன், ரவி சுப்பிரமணியன், இ. சூசை, கல்லூரி முதல்வர் பி. ஆன்ட்ரூ ஆகியோர் விளக்கிப் பேசினர். உதவிப் பேராசிரியர் செ. கென்னடி நன்றி கூறினார்.
விழாவில், தொகுப்பாசிரியர்கள் இரா. காமராசு, கிருங்கை சேதுபதி ஆகியோர் தொகுத்து வெளியிட்ட சிறுவர் கதைக் களஞ்சியம் எனும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com