தொலைக்காட்சி, திரைப்படத் துறையில் நல்ல தமிழை கொண்டுவர நடவடிக்கை தேவை

தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் நல்ல தமிழை கொண்டு வருவதற்கு நடவடிக்கை தேவை என்றார் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர்  முனைவர் கோ. விசுவநாதன்.

தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் நல்ல தமிழை கொண்டு வருவதற்கு நடவடிக்கை தேவை என்றார் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர்  முனைவர் கோ. விசுவநாதன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழியக்கம் அமைப்பு உருவாக்க மண்டலக் கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
தமிழகத்தில் தமிழுக்கு  ஆபத்து ஏற்பட்டுள்ளது ஏன் என்பதை  எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொண்டாற்றும் நிலை வந்துள்ளது. 90 நாடுகளில்  தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 10 கோடி முதல் 12 கோடி பேர் தமிழ் மொழி பேசுகின்றனர். 6,900  மொழிகளில்  30 மொழிகள் தான் சிறப்பு பெற்று விளங்குகின்றன.  எண்ணிக்கையில் தமிழ் மொழி 17 ஆவது இடத்திலிருந்தாலும், தொன்மையான மொழியில் தமிழ் மொழி முதலிடத்தில் உள்ளது.
பேச்சு வழக்கில் பல மொழிகள் மாறிவிட்ட நிலையில், மாறாமல் இருக்கும் மொழி தமிழ்மொழிதான்.  படித்த தமிழர்கள் தமிழ்மொழியில் பேசுவதில்லை. பெயர் வைப்பது வடமொழியில், பேசுவது ஆங்கிலத்தில் இருந்தால் தமிழ் எப்படி இருக்கும்.
தமிழ் படித்தவர்கள்கூட தமிழில் எழுதுவதில் தவறு செய்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் போது ஒருமை, பன்மை தெரியாமல் எழுதினால் உடனடியாக சரி செய்து விடுகிறார்கள். ஆனால், தமிழில் ஒருமை, பன்மை தெரியாமல் எழுதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஆங்கிலம் கலந்த தமிழ்தான் பேசப்படுகிறது. இந்த நிலையை மாற்றிட வேண்டும். தொலைக்காட்சிகளிலும், திரைப்படத்துறையிலும் நல்ல தமிழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தைத் தவிர்த்து, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மாநிலங்களில்  1 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களாகத் தமிழர்களாக இருந்தாலும் தமிழ் பேசுவதில்லை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
30 -க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்தாலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் மட்டும்தான் தமிழ் படிக்கும் வாய்ப்பை அந்தநாடுகள் அளித்திருக்கின்றன. மற்ற நாடுகளில்இந்த வாய்ப்பு இல்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் மட்டும் 7 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.  அங்குள்ளவர்கள் தமிழில் தங்கள் பெயர்களை வைத்துக் கொண்டாலும் அவர்களால் தமிழ் பேச முடிவதில்லை. இந்த நிலையை மாற்றிட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதற்காக உருவாக்கப்படும் தமிழியக்கத்தில் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கிட வேண்டும் என்றார் விசுவநாதன்.
முன்னாள் அமைச்சர் ந. நல்லுசாமி, பேராசிரியர் சோ. சத்தியசீலன், புலவர் வே. பதுமனார், பேராசிரியர் அப்துல்காதர் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைத்துப் பேசினர்.
கூட்டத்தில், மருத்துவர்கள் பழனியாண்டி, சுப.திருப்பதி,  திருக்குறள் சு. முருகானந்தம், கவிஞர் கடவூர் மணிமாறன், பேராசிரியர் கு.திருமாறன், பேராசிரியை திலகவதி, திருச்சி நகைச்சுவை மன்றச் செயலர் கோ. சிவகுருநாதன் உள்ளிட்டோர் பேசினர்.  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை  முனைவர் இரா. மாது, பேராசிரியர் மாணிக்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  வேலூர்  தமிழ்ச்சங்க அறக்கட்டளைச் செயலர் மு. சுகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com