பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி

டீசல் விலை 18 முறை உயர்ந்த போதும் பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி என்றார் திருச்சி தெற்கு மாவட்ட

டீசல் விலை 18 முறை உயர்ந்த போதும் பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி என்றார் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் திருச்சி கலைஞர்  அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து மேலும்அவர் பேசியது: திமுக ஆட்சியில் 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் 10 பைசாகூட பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. போக்குவரத்துத்துறைக்கு  மானியத்தை வழங்கியவர் கருணாநிதி.   திமுக ஆட்சிக் காலத்தில்தான் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய  ஒப்பந்தம் 2 முறை போடப்பட்டது.   17,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். கட்டணத்தை உயர்த்தாமல் ஆட்சி நடத்தியவர் கருணாநிதி.
 ஆனால், தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட பேருந்துகள் எண்ணிக்கை 6000-தான். பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான்.  போக்குவரத்துக் கழகங்களுக்கு முதல்வர் மானியமாக நிதியை வழங்கினாலே நஷ்டம் இல்லாமல் பேருந்துகளை இயக்கலாம் என்றார் நேரு.
கூட்டத்தில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுக்கூர் ராமலிங்கம்,   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பி. பத்மாவதி,  மதிமுக  சட்டத்துறைச் செயலர் செ. வீரபாண்டியன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  வேலு குணவேந்தன்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.எம்.கே. ஹபிபுர் ரகுமான் ஆகியோர் பேசினர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமார்,  வடக்கு மாவட்ட திமுக செயலர் என்.தியாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை  உறுப்பினர்கள்  அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
முன்னதாக, திருச்சி மாநகர திமுக செயலர் மு. அன்பழகன் வரவேற்றார். மலைக்கோட்டைபகுதிச் செயலர்  மு.மதிவாணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com