கன்னிமாரம்மன் கோயில் திருவிழா: ஆட்சியர் ஆலோசனை

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கு. ராசாமணி ஆலோசனை நடத்தினார்.

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கு. ராசாமணி ஆலோசனை நடத்தினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா பிரசித்தி பெற்றது.  மகா முனியப்பன், மாசிக்கருப்பண்ணன், பொன்னர், சங்கர், தங்காள் ஆகிய திருத்தெய்வங்களை கொண்ட இக்கோயிலில் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து வழிபடுவர்.
இந்தாண்டு திருவிழா வரும் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21, 23, 24 ஆகிய தேதிகளில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். 
இந்நிலையில் கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து  மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
வீரப்பூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் பின்புறம் உடனடி மருத்துவ வசதிக்கு சிறப்பு முகாம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  விழா நாள்களில் கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் அனைத்து தளவாட பொருள்களுடன் கோயில் அருகே 24 மணிநேரமும் தயார் நிலையில், விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவோர் முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். திருவிழா நாள்களில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமானவையா என்பதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காவல்துறை சார்பில் கோயில் அருகே புறக் காவல்நிலையம் அமைத்து கூடுதல் பாதுகாப்பு வசதி அளிக்க வேண்டும். 
நெடுஞ்சாலைத் துறை சார்பில் வீரப்பூருக்கு வரும் சாலைகளில் தடுப்புகள், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் கோயில் பகுதியில் தாற்காலிக நிழற்குடைகள், குடிநீர், பேருந்து நிறுத்தம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும். விழா சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகத்தினரும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சம்சாத்பேகம், கோட்டாட்சியர் பொன் ராமர், டிஎஸ்பி ஆசைத்தம்பி, போக்குவரத்துக்கழக துணை மேலாளர் வேலுச்சாமி, வட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com