திருச்சியில் களைகட்டியது கரும்பு, மஞ்சள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானைகள், செங்கரும்பு மற்றும் மஞ்சள்கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனை திருச்சியில் சனிக்கிழமை களைகட்டியது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பானைகள், செங்கரும்பு மற்றும் மஞ்சள்கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனை திருச்சியில் சனிக்கிழமை களைகட்டியது.
பொங்கல் பண்டிகைக்காக பொருள்கள் வாங்குவதற்காக காந்திசந்தையில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல், செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப்பூ விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதேபோல், உறையூர், தென்னூர் உழவர்சந்தை, தில்லை நகர் சாஸ்திரி சாலை, ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட், மெயின்கார்டுகேட், சத்திரம் பேருந்து நிலையம் பின்புறச் சாலை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை ஆகிய இடங்களில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியிருந்தது. இந்தப்பகுதிகளில் கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனைக்காக தாற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பொங்கல் பானைகள் குறைந்தபட்சம், 50 முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. செங்கரும்பு ஜோடி, ரூ.30 முதல் ரூ. 50 வரை அதன் உயரம், பருமன், நிறத்துக்கு தகுந்தபடி விலை இருந்தது. மஞ்சள் கொத்து ரூ. 15 முதல் 25 வரை விற்பனை செய்யப்பட்டது. பூளைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை அடங்கியவை ஒருகொத்து ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருச்சி பகுதிக்கு உள்ளூரில் விளைந்த செங்கரும்புகள் மட்டுமின்றி தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், பழனி பகுதிகளில் இருந்தும் ஏராளமான கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. திருச்சி தாயனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சன்னரக கரும்புகளும், திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி, பனையபுரம், கல்லணை, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த கரும்பு கட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல, வியாழன்மேடு, எட்டரை, மண்ணச்சநல்லூர்,போசம்பட்டி, வயலூர்,அழகியமணவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் விற்பனைக்கு வந்த மஞ்சள் கொத்துகளையும் மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து காந்திசந்தை வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, பொங்கல் பானை மற்றும் கலர் கோலப்பொடிகள் விற்பனை சுறுசுறுப்படையும். அதுபோல் இரண்டு நாள்களுக்கு முன் செங்கரும்பு, மஞ்சள் கொத்து, பூளைப்பூக்கள் குவிக்கப்படும். இருப்பினும் திருச்சி காந்தி சந்தையில் எதிர்பார்த்தபடி சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மேலும், வெள்ளிக்கிழமை இருந்த விலையைவிட காய்கறிகள், பொங்கல் பொருள்கள், பூக்கள் உள்ளிட்ட அனைத்துவிலைகளும் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். விற்பனையும் களைகட்டியது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com