திருப்பராய்த்துறை சிவன் கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. விசாரணை

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில் 3 உலோகச் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சனிக்கிழமை ஆய்வு

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில் 3 உலோகச் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
திருச்சி- கரூர் சாலையில் திருப்பராய்த்துறையில் மிகவும் பழைமையான அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் திருக்கோயிலில் உள்ளது.
ஐப்பசி மாத முதல் நாளன்று காவிரியில் நடைபெறும் துலா முழுக்கு நிகழ்வு மிகவும் விசேஷமானது. மேலும், சித்திரை மாதத் திருவிழா மே மாதத்தில் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது, சுவாமி புறப்பாட்டுக்காக சிவன், விநாயகர், உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகளை பாதுகாப்பு அறையிலிருந்து வெளியே எடுத்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உலோகத்திலான சண்டிகேசுவரர் சிலையும், அருள்மிகு அங்காளம்மன், போகசக்தி சுவாமிகளின் உலோகச் சிலைகளும் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்போது இக்கோயிலின் செயல் அலுவலராக இருந்த ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகத்தினர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், திருப்பராய்த்துறை கோயிலில் சுவாமி சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன். மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார், டி.எஸ்.பி. கருணாகரன் உள்ளிட்டோர் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயிலுக்கு சனிக்கிழமை வந்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
கோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ஜெயலதா மற்றும் கோயில் பணியாளர்கள், குருக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காணாமல் போன சிலைகளின் மதிப்பு, சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்த போன்ற விவரங்கள் குறித்து போலீஸார் விசாரித்தனர்.
இதுகுறித்து ஏ.டி.எஸ.பி. அசோக்குமார் கூறுகையில், திருப்பராய்த்துறை சிவன் கோயிலில் மாயமான 3 சிலைகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையின் முடிவில்தான் சிலைகள் குறித்த முழு விவரம் மற்றும் அதன் மதிப்பு தெரிய வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com