7 பேர் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அற்புதம்மாள் கூறியதைப் போன்று இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார். 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.
தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு மின்வாரியத்தின் திட்டமிடாத நடவடிக்கையே காரணமாகும்.  நீர்நிலைகளை உரிய நேரத்தில் தூர்வாரமால் வெறும் கணக்கு காட்டி பணத்தை எடுத்துக் கொண்டதாலேயே காவிரி, டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. உபரிநீர் வீணாக கடலில் கலக்க நேரிட்டுள்ளது. விரிவுபடுத்த வேண்டிய தேசிய நெடுஞ்சாலைகள் பலவும் தமிழகத்தில் உள்ள நிலையில், விளைநிலங்களை அழித்து கொண்டுவரப்படும் 8 வழிச்சாலை தேவையற்றது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசால் செயல்படுத்தவும் முடியாது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயம் காரணமாகவே முன்கூட்டியே அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் வாக்கு கேட்பது எங்களுக்குதான் சாதகமாக இருக்கும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெறும். குக்கர் சின்னத்தை சட்டப்படி கோருவோம்.  எதிலும் அலட்சியப் போக்குடன் செயல்படும் இந்த அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவர். அரசே மூட வேண்டிய சூழலில் உள்ளது. மூடப்படும் அரசு பள்ளிகள் அனைத்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திறக்கப்படும் என்றார். பேட்டியின்போது, அமமுக மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன், ஜெ. சீனிவாசன், எம். ராஜசேகரன், அமைப்புச் செயலர் சாருபாலா ஆர். தொண்டைமான் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com