குற்றச்செய்திகள்

இளம்பெண்ணிடம் நகை பறிப்பு 
திருச்சி வயலூர் சாலை உய்யக்கொண்டான் திருமலை அருகேயுள்ள சண்முகாநகர்  முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி விஜயப்ரியா (29). இவர் புதன்கிழமை காலை, சீனிவாச நகர் மற்றும் ராயர்தோப்பு சந்திப்பு சாலை அருகே நடந்து சென்றபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற மர்ம நபர்கள் இருவர், விஜயப்ரியா கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மோசடி நபர் கைது
திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரிச்சர்டு மற்றும் ஜார்ஜ். இருவரும் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருந்தனர். 
கடந்த சில நாள்களுக்கு முன் இருவரும் சிஎஸ்ஐ மருத்துவமனை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர், தான் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டியன் (43)  எனவும், அரசியல் கட்சி பிரமுகர் எனவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். பின்னர் முதியோர் உதவித்தொகையை பெற்றுத் தருவதாகவும் அதற்கு இருவரிடமும் ரூ. 11, 000 தருமாறும் கூறியுள்ளார்.
அதை நம்பி இருவரும் பணம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு அவர் பணம் பெற்றுத் தரவில்லை. 
பணத்தை கேட்ட இருவரையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து உறையூர் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜபாண்டியனை புதன்கிழமை இரவு கைது செய்தனர். 

வழிப்பறி, திருட்டு: 3 பேர் கைது
திருச்சி கே.கே. நகர் அருகேயுள்ள ஐயப்பநகர் குமுதம் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (56). இவர் புதன்கிழமை பேருந்துக்காக, காஜாமலை காலனி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவரது கைப்பையை திருட முயன்றதாக மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் பகுதியைச் சேர்ந்த சுமிதா மற்றும் ஜீவா ஆகி இரு பெண்களையும் அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
தென்னூர்  சத்யா நகரைச் சேர்ந்தவர் அரிசி வியாபாரி கார்த்திக். இவர் புதன்கிழமை தென்னூர் பகுதியில் சென்றபோது, அவரை மிரட்டி குப்பாங்குளத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ரொக்கத்தை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தனர்.

தொழிலாளி சாவு
திருச்சி கோட்டை சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பா. சுகுமார் (39). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த 6 மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மதுவுடன் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என  கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com