கூடுதல் வருவாய் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் முறை!

இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற, பயிர் சாகுபடியுடன் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட உபதொழில்களை கொண்ட ஒருங்கிணைந்த
கூடுதல் வருவாய் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் முறை!

திருநெல்வேலி: இன்றைய சூழ்நிலையில் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற, பயிர் சாகுபடியுடன் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட உபதொழில்களை கொண்ட ஒருங்கிணைந்த பண்ணையம் முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். 
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி மைய துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.
பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.
குறிக்கோள்கள்: பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை.
அடிப்படைத் தத்துவங்கள்: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும் ஒரு உப தொழிலிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போதுதான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயறு, மூன்றாம் போகத்தில் பயறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஓர் அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கும் ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைக்கும் சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.
மீன் குட்டையில் கோழி வளர்ப்பு: கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துகளும், 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.
கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சி பெற்று 6 -வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.
சிப்பிக்காளான் வளர்ப்பு: நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர் சக்கை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக உள்ளது. இதனால் குறைந்த செலவில் காளான் உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் உற்பத்தி செய்யும் காளான்களை அன்றன்றே விற்பனை செய்து விட வேண்டும்.
கறவை மாடு வளர்ப்பு: மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கும் மணிகள், தட்டு மூலமாகவும் பசுந்தீவனங்கள் மூலமாகவும் விவசாயிகள் 2 முதல் 3 கறவை மாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
காடை வளர்ப்பு: 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறைக்கு 500 காடைக் குஞ்சுகள் என்ற அளவில் வளர்த்தால் மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு: வடகிழக்கு பருவமழை காலத்தில் நடுத்தர, அதிக வயதுடைய ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது. நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் அதிக வருமானம் பெறுவதற்கும் நெல் வயலில் மீன் வளர்ப்பு உதவிகரமாக இருக்கும்.
இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்துவதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கலாம். மீன் கழிவுகள் வயலுக்கு உரமாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். 
வடகிழக்கு பருவமழை காலத்துக்குப் பின் சம்பா, தாளடி பருவத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீன்வளர்ப்புக்கு வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ரகங்கள் மிகவும் ஏற்றவை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com