நெற்பயிரில் குருத்துப் பூச்சி மேலாண்மை!

நெற்பயிரில் லாபகரமான மகசூலை எட்ட குருத்துப்பூச்சி மேலாண்மை அவசியமாகும்.
நெற்பயிரில் குருத்துப் பூச்சி மேலாண்மை!

திருநெல்வேலி: நெற்பயிரில் லாபகரமான மகசூலை எட்ட குருத்துப்பூச்சி மேலாண்மை அவசியமாகும். இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ச.ஆறுமுகச்சாமி வழங்கும் ஆலோசனைகள்:
நெற்பயிரை பல்வேறு விதமான பூச்சிகள் தாக்கினாலும், குருத்துப் பூச்சியானது மகசூலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குருத்துப் பூச்சியின் தாக்குதலானது அதிக வயதுடைய நாற்றுகளை நடும்போதும், தொடர்ந்து நெற் பயிரை மட்டும் பயிரிடும் இடங்களிலும் அதிகமாகக் காணப்படும். பொதுவாக நான்கு வகையான குருத்துப் பூச்சிகள் இருந்தாலும், மஞ்சள் குருத்துப் பூச்சியானது அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கைப் பருவம்: தாய் அந்துப் பூச்சிகள் மஞ்சள் நிறத்துடன் முன்னிறக்கையில் கரும்புள்ளியுடன் காணப்படும். இவை இலை நுனிக்கு சற்று கீழே முட்டைகளை குவியல்களாக இட்டு அதனை ஒருவித உரோமங்களினால் மூடிவிடும். ஒவ்வொரு முட்டைக் குவியலிலும் 15 முதல் 80 முட்டைகள் இருக்கும். 
ஒவ்வொரு தாய்ப்பூச்சியும் 2 முதல் 3 முட்டைக் குவியல்களை இடும். பொதுவாக முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவர எடுத்துக்கொள்ளும் காலம் 5 முதல் 8 நாள்கள் ஆகும். புதிதாக வெளிவரும் புழுவானது வெளிறிய மஞ்சள் நிறத்துடனும், அடர்ந்த பழுப்பு நிறத் தலையுடனும் காணப்படும். பொதுவாக, புழுப்பருவமானது 33 முதல் 41 நாள்கள் ஆகும். புழுவானது அடிதண்டினுள் நுழைந்து உள்ளே சென்று கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுவானது அந்துப் பூச்சியாக வெளியே வர எடுத்துக்கொள்ளும் காலம் 6 முதல் 10 நாள்கள் ஆகும். 
தாக்குதல் மற்றும் அறிகுறிகள்: முட்டையிலிருந்து புழுவானது வெளியே வந்தவுடன் அதன் வாயிலிருந்து சுரக்கும் ஒருவித நூலினால் கீழிறங்கி, தண்ணீரில் நீந்திச் சென்று அருகிலுள்ள பயிர்களின் தண்டினைச் சென்றடையும். 
பின்னர் தண்டினைத் துளைத்து, நடுக்குருத்தைக் கடித்து உண்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட தூர்களின் நடுக்குருத்து வாடி நாளடைவில் காய்ந்து விடுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். இப்புழுக்கள் தொடர்ந்து வளர்ந்த பயிர்களையும், அதாவது கதிர் விடும் சமயத்தில் தாக்கும்பொழுது கதிரில் உள்ள மணிகள் பால்பிடிக்காமல் சாவியாகி வெண் கதிர்களாக மாறிவிடுகின்றன. இதனால் மகசூல் பெருமளவில் குறைகிறது. 
இவ்வாறு தாக்கப்பட்ட காய்ந்த குருத்துகள் மற்றும் வெண் கதிர்களைக் கையால் இழுக்கும்போது அவை சுலபமாகக் கையோடு வந்துவிடும். தாக்கப்பட்ட தண்டின் கணுக்களுக்கு அருகில் புழு குடைந்த துளை காணப்படும். மேலும்  தாக்கப்பட்ட பயிர் தண்டினை முழுவதுமாகப் பிளந்து பார்த்தால் புழு குடைந்து உண்ட தண்டுப்பகுதியும், அதன் கழிவுகளும், சில சமயங்களில் புழுவோ, அதனுடைய கூட்டுப்புழுவோ உள்ளிருப்பதும் தெரியும்.
பொருளாதார சேதம்: இளம் பயிரில் ஒரு சதுர மீட்டருக்கு 2 முட்டைக் குவியல்கள் இருக்கும்.  பயிரின் வளர்ச்சிக் காலத்தில் 10 சதவீத தூர்களில் நடுக்குருத்து வாடி இருக்கும். மணி பிடிக்கும் 2 சதவீத வெண் கதிர்கள்  தோன்றும்.
தாக்குதலை தடுப்பது எப்படி?: அறுவடை செய்த பின்னர் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.  நடவு செய்யும்போது வாடிய குருத்து உடைய நாற்றுகளை தவிர்க்க வேண்டும்.  நடுவதற்கு முன் இலையின் நுனியில் உள்ள முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக தழைச்சத்து இடக்கூடாது. நடவு வயலில் டிரைக்கோகிரம்,  ஜப்பானிகம் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சி.சி. வீதம் 15 நாள்கள் முதல் வாரம் ஒரு முறை நான்கு வாரத்திற்கு வயலில் கட்டி குருத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி மற்றும் 5 இனக்கவர்ச்சிப் பொறி என்ற அளவில் வைத்து அந்துப் பூச்சியினை கவர்ந்து அழிக்கலாம். மேலும் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதனுடைய  ண்ணிக்கைக்கேற்ப மருந்து தெளிக்க வேண்டும். இப்பூச்சியானது பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் பொழுது ஒரு ஏக்கருக்கு குளோரன்டிராலினிப்புரோல்18.5 எஸ்சி 60 மி.லி. அல்லது டிரைஅசோபாஸ் 40 எஸ்சி 400 மி.லி. அல்லது இன்டாக்சகார்ப் 14.5 எஸ்சி 80 மி.லி. அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 டபிள்யூஎஸ்சி 400 மி.லி. அல்லது புரோபனோபாஸ் 50 எஸ்சி 400 மி.லி அல்லது தையோமீதாக்சோம் 25 டபிள்யூசி 400 மி.லி. அல்லது புளுபென்டியமைடு 480 எஸ்சி 20 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 500 இசி 400 மி.லி. அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி 200-250 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 
விசைத் தெளிப்பானுக்கு ஏக்கருக்கு 60 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பான் என்றால் 200 லிட்டர் தண்ணீரும் வேண்டும். டேங்க் ஒன்றிற்கு ஒட்டும் திரவம் 20 மி.லி. என்ற அளவில் கட்டாயம் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com