முதல்வர் பதவி அளித்தால் சிறப்பாக செயல்படுவேன்

முதல்வர் பதவி அளித்தால் சிறப்பாக செயல்படுவேன் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

முதல்வர் பதவி அளித்தால் சிறப்பாக செயல்படுவேன் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெலகாவியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், "முதல்வர் பதவியில் யாரை உட்காரவைப்பது என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினேன். 2 சட்டப்பேரவைத் தேர்தல்களை தலைமையேற்று நடத்தியுள்ளேன். அதை அங்கீகரிக்கும் வகையில், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை திறம்பட நிர்வகித்து வருகிறேன். கட்சி எனக்கு எந்த பதவியை கொடுத்தாலும் அதை ஏற்று செயல்படுவேன். ஒருவேளை எந்த பதவியையும் கட்சி வழங்காவிட்டால் அதை பற்றி கவலைப்பட மாட்டேன். கட்சி மேலிடம் முதல்வர் பதவியை அளித்தால் அதை திறம்பட செயல்படுத்துவேன்" என்றார் அவர்.
இது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய தீர்மானித்துள்ளன. மேலும், முதல்வராக குமாரசாமிக்கும் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பதவியை அளித்தால் ஏற்பேன் என்பது கூட்டணியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தாவணகெரேயில் சனிக்கிழமை முதல்வர் குமாரசாமி கூறுகையில், "முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் கர்நாடகத்தில் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களில் ஜி.பரமேஸ்வரும் ஒருவர். முதல்வர் பதவி யாருக்கும் நிரந்தரமானதல்ல. சுதந்திரத்துக்கு பிறகு கர்நாடகத்தில் எத்தனை கட்சிகள், எத்தனை முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பதாக ஜி.பரமேஸ்வர் கூறியுள்ளதில் தவறேதுமில்லை' என்றார் அவர்.
பெங்களூரில் சனிக்கிழமை நீர்வளத் துறை அமைச்சர்டி.கே.சிவக்குமார் கூறுகையில், "அரசியலில் ஈடுபட்டுள்ளோர் முதல்வர் பதவியை பெற ஆசைப்படுவதில், விரும்புவதில் தவறேதுமில்லை. குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்வராக இருக்க காங்கிரஸ் கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்துகொடுத்துள்ளது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளோம்.
எனவே, முதல்வர் பதவி குறித்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் பேசவேண்டும். ஆட்சிக்கு வந்து வெறும் 6 மாதங்களே ஆகியுள்ளன. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு. முதல்வர் பதவியை பெறுவதில் எனக்கு அவசரம் எதுவுமில்லை. அந்த பதவியை அடைய நான் ஆசைப்படுவதில் தவறொன்றுமில்லை' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com