விவசாயிகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதல்வர் குமாரசாமி

விவசாயிகள் குறித்து முதல்வர் குமாரசாமி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார். 

விவசாயிகள் குறித்து முதல்வர் குமாரசாமி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார். 
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவதுபோல முதல்வர் குமாரசாமி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை அளிப்பதற்கு பதிலாக, அவர்களை துன்புறுத்தி வருகிறார்கள்.
சிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் வட்டத்தின் மசரூர் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமண், எந்த தவறும் செய்யாத நிலையில் அதிகாரிகள் துன்புறுத்தியதால் உயிரிழந்துள்ளார். 100 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கடந்த 30-40 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் விவசாயிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முற்பட்டதோடு, போராட்டம் நடத்திய விவசாயிகளை துன்புறுத்தியிருக்கிறார்கள். அப்போது ஹனுமந்தையா உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டி, துன்புறுத்தியதைத் தொடர்ந்து, லட்சுமண், அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளார்.
எனவே, புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளை அப்புறப்படுத்தும் வேலையை உடனடியாக நிறுத்தும்படி அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இறந்துபோன விவசாயி லட்சுமண் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தைக் கண்டித்து பா.ஜ.க. எம்.பி. ராகவேந்திரா, எம்.எல்.ஏ. ஹர்தாள் ஹாலப்பா ஆகியோர் 3 மணி நேரம் போராட்டம் நடத்திய பிறகும், உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை. விவசாயிகள் நலனில் மாநில அரசுக்கு கிஞ்சிற்றும் அக்கறையில்லை. இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரி ஹனுமந்தையாவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இதை செய்யத் தவறினால், பாஜக போராட்டம் நடத்த நேரிடும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com