விவசாயிகளின் போராட்டத்துக்கான காரணம் புரியவில்லை: முதல்வர்

விவசாயிகளின் போராட்டத்துக்கான காரணம் புரியவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கான காரணம் புரியவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு விதானசெளதாவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து சுதந்திரப் பூங்காவை நோக்கி திங்கள்கிழமை விவசாயிகள் பேரணி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  என்னையும் (குமாரசாமி), குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளனர்.  விவசாயிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை.
பெலகாவியில் உள்ள சுவர்ணசெளதாவின் நுழைவு வாயிலை விவசாயிகள்  அண்மையில் உடைத்து, கரும்புடன் இருந்த லாரியைக் கொண்டு, கரும்பை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இது சரியான நடவடிக்கையா?
போராட்டத்தின்போது,  பெண் விவசாயி ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு பாக்கியை சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை என்று கூறினார். இதற்காக,  கிராமத்தில் கேட்பதைப்போல,  "4 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என்று கேட்டேன். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  இதை பாஜகவினர் பெரிதுபடுத்து அரசியல் ஆக்கி வருகின்றனர்.  பேசியது பெண் விவசாயியை புண்படுத்தியிருந்தால், அதனை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். 
முதல்வராகப் பதவி வகித்தபோதும், தனிப்பட்ட முறையில் பெண்களுக்கு அதிகம் கெளரவம், மரியாதை கொடுப்பேன். பல ஏழை பெண்களுக்கு அவர்கள் கேட்ட நிதியை வழங்கி உதவியுள்ளோம். 
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், அதற்கு தேவையான நிதியை திரட்டவும் தொடர்ந்து யோசித்து, பணியாற்றி வருகிறேன்.  விவசாயிகளின் மீது அக்கறையும், அன்பையும் கொண்டுள்ள நிலையில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கான காரணம் புரியவில்லை. 
நெல், மக்காச்சோளம் கொள்முதல் செய்வது குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம்.  விவசாயிகள் எந்த பிரச்னை என்றாலும் நேரடியாக வரலாம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரிய தீர்வை காணுவோம். அதைவிடுத்து போராட்டங்களில் ஈடுபடுவதால் எந்தப் பயனும் இல்லை. முதல்வர் பதவி நிரந்தரமில்லை. அதனை எந்த நிமிடத்திலும் உதறி தள்ளிவிட்டுச் செல்லத் தயாராக உள்ளேன். மக்களுக்கான பணியாற்றிட வந்தவரை  புறக்கணித்தால், நஷ்டம் விவசாயிகளுக்குதான் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். 
விவசாயிகள் பிரச்னை குறித்து பெலகாவி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜகவுடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன் என்றார் குமாரசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com