தென்னிந்திய மண்டலக் குழு கூட்டம்: 22 பிரச்னைகளுக்குத் தீர்வு: தமிழகம்- ஆந்திரம் இடையேயான பிரச்னைகள் குறித்து விவாதம்

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னிந்திய மண்டலக் குழு (சதர்ன் ஜோனல் கவுன்சில்) கூட்டத்தில் 22 பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னிந்திய மண்டலக் குழு (சதர்ன் ஜோனல் கவுன்சில்) கூட்டத்தில் 22 பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற 28-ஆவது கூட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர மாநில நிதித் துறை அமைச்சர் யானமலராம கிருஷ்ணுடு, கேரள மாநில நிதித் துறை அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக், அந்தமான் நிக்கோபார் மாநில துணை நிலை ஆளுநர் டி.கே.ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தென் மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மத்திய அரசு தாமதிக்காது என்று கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. 
முக்கிய விவாதம்
பழவேற்காடு ஏரியில் மீன் உரிமை குறித்து தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மீனவர்களுக்கு இடையே நிலவும் பிரச்னை, புனித சேசாஷலம் மலைப்பகுதியில் செம்மரக்கடத்தல் அச்சுறுத்தல், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து கூடுதல் நீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தீபகற்ப சுற்றுலா ரயில்கள் அறிமுகம், அனைத்து வகையான படிப்புகளுக்கும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சீராக்குவது, தென்னிந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் உற்பத்தியைப் பெருக்குவது, புதுச்சேரி விமானநிலையத்தை மேம்படுத்துவது போன்ற கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்து செயலாக்க ஆய்வு நடத்தப்பட்டது. 
22 பிரச்னைகளுக்குத் தீர்வு
தென்னிந்திய கடலோர மாநில மீனவர் பிரச்னைகள், ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன் வளர்ப்பில் ஆன்டிபயோடிக் எச்சமிருப்பது, தென்மண்டல மாநிலங்களின் காவல் படையை நவீனமாக்குவதற்கான திட்டம், சமையல் எரிவாயு சேமிப்புக் கிடங்கு மனை திட்டத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது, உயிரி எரிபொருள் திட்டங்கள் குறித்த பிரச்னைகள் உள்ளிட்ட 27 பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, அவற்றில் 22 பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டம்,1956-இன்படி மேற்கு, கிழக்கு, வடக்கு,தெற்கு, மத்திய ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டது. 
குழுவின் நோக்கம்
பொருளாதார மற்றும் சமூக திட்டமிடல், எல்லை பிரச்னை, மொழிச் சிறுபான்மையினர், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து விவாதித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க இக்குழு அமைக்கப்பட்டது. தேசிய நலனை முன்னிலைப்படுத்திக் கொண்டு, மண்டல பொருளாதார, அரசியல், பண்பாட்டுரீதியான ஒன்றிணைப்பை ஊக்குவிப்பதற்காக இக்குழு செயல்பட்டுவருகிறது. 
மேலும் கூட்டாட்சி கட்டமைப்பில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சீரான ஒத்துழைப்பை நல்குவதும் இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 2 தென்னிந்திய மண்டலக் குழுக் கூட்டங்கள், 3 நிலைக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 
இதுவரை 8 குழுக்கூட்டங்கள், 12 நிலைக்குழு கூட்டங்கள் நடத்தபட்டு, 600 பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, அவற்றில் 406 பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தென்னிந்திய மண்டலக் குழுவின் அடுத்தக்கூட்டம் தமிழகத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com