"தும்கூரு சாலையில் சிவக்குமார சுவாமிகளுக்கு சிலை'

தும்கூரு சாலையில் சிவக்குமாரசுவாமிகளுக்குச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று

தும்கூரு சாலையில் சிவக்குமாரசுவாமிகளுக்குச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னடம்- கலாசாரத்தைப் பேணி பாதுகாக்க கலாசாரத் திருவிழா, ஜெயமகால் தசரா விழா, கடலைக்காய் திருவிழா, பெங்களூரு கரகம், நாட்டுப்புறக்கலைவிழாவுக்கு ரூ.2.5கோடி ஒதுக்கப்படுகிறது. 
நாட்டுப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்க முற்றம் திட்டம் வகுக்கப்படும். டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தினவிழா, துப்புரவுத்தொழிலாளர் தினவிழா கொண்டாட ரூ.5.5கோடி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சி தமைமை அலுவலகம்,  வார்டுகளில் கெம்பேகெளடா தினவிழாவை கொண்டாட ரூ.5கோடி ஒதுக்கப்படும். பன்னாட்டு, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்துவிளங்கும் விளையாட்டுவீரர்களை ஊக்குவிக்க ரூ.1கோடி ஒதுக்கப்படும். 
பெங்களூரில் தும்கூருசாலையில் சிவக்குமாரசுவாமிகளுக்கு ரூ.5கோடி செலவில் சிலை அமைக்கப்படும். ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலம்பாதிக்கப்பட்ட சிறப்புகுழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கி வரும் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்க சிவக்குமாரசுவாமிகள் பெயரில் ஆண்டுதோறும் விருதுவழங்கி, ரூ.25லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். 
சந்தை: கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் சந்தைகட்டடங்களை மேம்படுத்த, பராமரிக்க ரூ.5கோடி ஒதுக்கப்படுகிறது.
திடக்கழிவுமேலாண்மை: துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதியத்துக்கு ரூ.375கோடி, பெங்களூரு மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க ரூ.375கோடி ஒதுக்கப்படுகிறது. 
சொத்து பராமரிப்பு: மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க ரூ.10கோடி செலவில் வேலிகள் அமைக்கப்படும். வளர்ச்சிப்பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தும்போது, அதற்கு ஈட்டுத்தொகை வழங்க ரூ.50கோடி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சி சொத்துக்களை மதிப்பிட்டு, தணிக்கை செய்ய ரூ.5கோடி ஒதுக்கப்படுகிறது.
தோட்டக்கலை: கிழக்கு, தெற்கு, மேற்கு மண்டலங்களில் பூங்காக்கள், சாலை இடைநிலை பூங்காக்கள், மேம்பாலங்கள், சந்திப்புகளை பராமரிக்க தலா ரூ.8கோடிவீதம் ரூ.24கோடி ஒதுக்கப்படுகிறது. தாசரஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, எலஹங்கா, ராஜராஜேஸ்வரிநகரில் பூங்காக்கள், சாலை இடைநிலை பூங்காக்கள், மேம்பாலங்கள், சந்திப்புகளை பராமரிக்க தலா ரூ.2கோடிவீதம் ரூ.10கோடி ஒதுக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறையின் இடுகாடு, சுடுகாடுகளை பராமரிக்க ரூ.3கோடி ஒதுக்கப்படும்.
நகர்ப்புற வன மேலாண்மை: 198 வார்டுகளில் பசுமைப்பரப்பை பாதுகாக்க ரூ.5கோடிசெலவில் மரம்நடும் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.2கோடிசெலவில் மரக்கணக்கெடுப்பு நடத்தப்படும். ரூ.3கோடி செலவில் 10 லட்சம் மரக்கன்றுகளை விளைவிக்கும் திறன்கொண்ட 2 நாற்றங்கால்களை உருவாக்கப்படும்.
ஏரிகள்: மாநகராட்சியால் மேம்படுத்தப்பட்ட எரிகளை பராமரிக்க ரூ.25கோடி ஒதுக்கப்படுகிறது. 
மண்டலபொதுப்பணிகள்: புதிய வார்டுகளை மேம்படுத்த தலா ரூ.3கோடி, பழைய வார்டுகளை மேம்படுத்த ரூ.2கோடிவீதம் 198 வார்டுகளில் பொதுப்பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ.465கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் 60 சத நிதி சாலை பராமரிப்பு, தார்போடுதல், குழிமூடுதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும். 
குடிநீர் வழங்கலுக்கு புதியவார்டுக்கு ரூ.30லட்சம், பழைய வார்டுக்கு தலா ரூ.15லட்சம் வீதம் மொத்தம் ரூ.49.05கோடி ஒதுக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளிலும் ரூ.5கோடி செலவில் சலவையாளர் மையம் உருவாக்கப்படும், பராமரிக்கப்படும். மாநகராட்சி பணியாளர் குடியிருப்பை மேம்படுத்த ரூ.2கோடி, தென்மண்டல அலுவலகத்தில் புதிய கூட்ட அரங்கை கட்டுவதற்கு ரூ.1கோடி ஒதுக்கப்படுகிறது. தெருவிளக்குகளைப் பராமரிக்க ரூ.79கோடி ஒதுக்கப்படுகிறது.
மழைநீர்வடிகால்: மழைகாலங்களில் மழைநீர் வடிகாலில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அவற்றை தூர்வார ரூ.25கோடி ஒதுக்கப்படுகிறது.
சாலை உள்கட்டமைப்பு: தகவல்தொழில்நுட்ப குவிமையப்பகுதியை மேம்படுத்த ரூ.125கோடி செலவில் தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்ப தாழ்வாரம் அமைக்கப்படும். இதற்கான வரைவுதிட்டத்தை தயாரிக்க ரூ.3கோடி ஒதுக்கப்படுகிறது. வெளிவட்ட, உள்வெளிவட்டசாலைகளை பராமரிக்க ரூ.142கோடி ஒதுக்கப்படுகிறது. கார்டுசாலை முதல் குருபரஹள்ளி வரையில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கு பாலகங்காதரசுவாமிகளை பெயரைசூட்டி, அங்கு சிலையும் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com