பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நாளை தொடக்கம்

11-ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப். 21-ஆம் தேதி தொடங்குகிறது.

11-ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப். 21-ஆம் தேதி தொடங்குகிறது.
1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சார்பில் கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்படவிழா நடந்துவருகிறது. அதேபோன்றதொரு திரைப்பட விழா பெங்களூரில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கர்நாடக அரசு உதவியுடன் நடைபெறும் இந்த திருவிழா, 2009-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு சர்வதேச திரைப்படவிழா என்ற பெயரில் அரசு விழாவாக நடந்து வருகிறது. 
அதன்படி, 11-ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் பிப். 21-ஆம் தேதி தொடங்கி 8 நாள்கள் நடைபெற உள்ளது. 
இந்தவிழா குறித்து செவ்வாய்க்கிழமை செய்தித்துறை செயலாளர் பங்கஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 
11-ஆவது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, பிப். 21 முதல் 28-ஆம் தேதிவரை பெங்களூரில்  நடத்தவிருக்கிறோம். பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள ஓரியன்மால் வணிக வளாகத்தில் உள்ள திரைகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சர்வதேச அளவிலான 60 நாடுகளைச் சேர்ந்த 225  திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. 
இந்த திரைப்பட விழாவில்  சிறந்த படங்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியான திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். திரைப்பட விழாவை முதல்வர் குமாரசாமி, விதான செளதாவில் பிப். 26-ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடக்கிவைக்கிறார்.
திரைப்பட விழாவை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. திரைப்பட விழாவில் அண்மையில் மறைந்த நடிகர்கள் அம்பரீஷ், சி.எஸ்.லோகநாத், எம்.எல்.வியாசவராவ், பெங்காலி திரைப்பட இயக்குநர் ஷியாம்பெனகல் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர்கள் பங்கேற்ற சிறந்த திரைப்படங்களைத் திரையிடவும் முடிவு செய்துள்ளோம்.
திரைப்பட விழாவில் சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார். 
பேட்டியின் போது கர்நாடக திரைப்படத் துறை அகாதெமியின் தலைவர் நாகேத்தள்ளி சந்திரசேகர், பதிவாளர் எச்.பி.தினேஷ், செய்தித்துறை இணைச் செயலாளர் பிரகாஷ், இயக்குநர் வித்யாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com