பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி தொடக்கம்

மெய்சிலிர்க்கும் விமான சாகசங்களுடன் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி பெங்களூரில் புதன்கிழமை கோலாகமாக தொடங்கியது.

மெய்சிலிர்க்கும் விமான சாகசங்களுடன் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி பெங்களூரில் புதன்கிழமை கோலாகமாக தொடங்கியது.
இந்திய விமானப் படை, இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம்(எச்ஏஎல்) மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி, பெங்களூரு எலஹங்கா விமானப் படை தளத்தில் புதன்கிழமை தொடங்கியது. 
இக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடக்கிவைத்தார். விழாவில் மத்திய விமானத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு, மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ்பம்ரே, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ராணுவத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தளபதி சுனில் லம்பா, விமானப் படை தளபதி பீரேந்தர் சிங் தனாவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விமான சாகசங்கள்: இதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் வெவ்வேறு வகையான இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சிறுவிமானங்கள், இலகுரக போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரக போர்விமானம், சாரங்க் ஹெலிகாப்டர், தனுஷ், ருத்ரா, துருவ் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30-எம்.கே.ஐ. இலகுரக போர்விமானம், டக்கோடா விமானம், ஜக்குவார் விமானம், ஹாக் ஹெலிகாப்டர், எம்.ஐ.-17 ஹெலிகாப்டர், எச்டிடி-40 பயிற்சிவிமானம், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்(எல்யூஎச்), சாரஸ் போர்விமானம், ஏர்பஸ்-ஏ-330 பயணிகள் விமானம், போயிங்-பி-52, அமெரிக்காவின் பி8ஐ விமானம், எஃப்-16 இலகுரக போர்விமானம்,பிரான்சின் ரஃபேல் இலகுரக போர்விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் பார்வையாளர்களின் கைதட்டல்களை தட்டி சென்றன. எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள எல்யூஎச் எனப்படும் இலகுரக பயன்பாடு ஹெலிகாப்டர் வானில் குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. 
விண்ணில் சீறிய போர்விமானங்கள், எதிர்பாராவிதமாக அடித்த பல்டிகள் காண்போரை சிலிர்க்க வைத்தன. தேஜஸ் விமானம், வானத்தில் சுழன்றடித்து செய்த சாகசங்கள் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாராட்டை பெற்றன. 2 மணி நேரம் நடைபெற்ற 61 விமானங்களின் வான்வெளி சாகசங்கள் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு தள்ளிவிட்டது. 
இந்தியாவின் சொந்ததொழில்நுட்பத்தில் உருவான போர்விமானங்களின் செயல்திறன்,தொழில்நுட்பம், பயன்பாட்டு வீச்சு உலக நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமல்ல இந்திய பிரதிநிதிகளின் புருவங்களையும் உயர்த்தின.
 

சாலையோர ரசிகர்கள்
கண்காட்சியில் விண்ணில் பறந்து சாகசங்கள் புரிந்த விமானங்களை காண விமானப்படைதளத்தில் உள்ளே அனுமதி வர இயலாத பொதுமக்கள், பெல்லாரி சாலையில் நின்றப்படி விமானங்களை கண்டு ரசித்தனர்.விமான சாகசங்களை காண ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்களை, விமானப்படை தளத்தின் சுற்றுச்சுவர் அருகே வர போலீஸாரும், ராணுவத்தினரும் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், தடைவிதிக்கப்பட்ட பகுதியில் இருந்துவெகு தொலைவில் நின்று விமான சாகசங்களை கண்டு அதிசயித்தனர்.

மோசமான ஏற்பாடு
இந்திய விமானத் தொழில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. விழா அரங்கிற்கு செல்ல சீராக பாதையில்லை. தொடக்க விழாவுக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். இதனால் ஒருசிலர் உரிய நேரத்திற்கு வரமுடியாதசூழல் ஏற்பட்டு, தாமதமாக வந்ததால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.  தொடக்க விழாவில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் மூன்றில் ஒருபகுதி காலியாகவே இருந்தது. அழைப்பிதழ் அளிக்காததால் யார் பேசுகிறார்கள், அடுத்து என்ன நிகழ்ச்சி என்பதுதெரியாமல் மக்கள் குழம்பினர். தொடக்கவிழாவின்போது கழிவறை, சிற்றுண்டு, தேநீர் வசதிகளும் சரியாக இல்லாததால் வெளிநாட்டினர் பெரும் இன்னலை அனுபவித்தனர். உணவு அரங்கங்கள் உரிய நேரத்தில் அமைக்கப்படாததால், உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஊடகவியலாளர்கள் காலை சிற்றுண்டி கிடைக்காமல் ஒருமணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. எல்லாவற்றையும்விட கண்காட்சியை காணவந்த வெளிநாட்டினரும் உற்சாகமாக இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com