காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை: கர்நாடகத் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்

கர்நாடகத்தில்  காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில்  காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திரஹோட்டலில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் சார்பில்,  அமைச்சர்கள்,  காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுக்கு  சிற்றுண்டி விருந்து திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. 
விருந்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்,  அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஜமீர் அகமது கான், வெங்கட்ரமணா, சிவசங்கர் ரெட்டி, சிவானந்த பாட்டீல், ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:- கர்நாடகத்தில் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறது.  பிப்ரவரி முதல் வாரத்தில் நிதி நிலை அறிக்கையைத் தாக்க செய்ய முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.  எனவே துறை வாரியாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். 
காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நிறைவேற்ற ஆலோசனை நடத்தினோம்.
பாஜகவினர் ஆபரேஷன் தாமரை திட்டத்தின் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திட்டம் ஒருபோதும் பலிக்காது.  ஆட்சிக்கு ஆபத்து உள்ளது போன்ற சூழலை உருவாக்க,  பாஜகவினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.  இருந்தாலும்,  கூட்டணி அரசுக்கு எந்தவிதமான ஆபத்துமில்லை. ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்புகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக அவர்கள் பாஜகவில் இணை முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று அர்த்தம் ஆகாது. 
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது  நம்பிக்கை உள்ளதால், ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் பரமேஸ்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com